(ரமீஸ் எம் லெவ்வை)
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு கட்சியின் பிரதி தலைவரும், அட்டாளைச்சேனை தேர்தல் குழுவின் தலைவருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களின் தலைமையில்,முன்னாள் மாகாண அமைச்சரும்,பிரதி தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் உதுமாலெவ்வை அவர்களின் வழிநடாத்தலின் கீழ்,பீச் ஹவுஸ் கூட்ட மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இதன்போது உரைநிகழ்த்திய ஸ்ரீ.மு.கா தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரித்ததாவது;
இத்தேர்தலில் ஏற்பட்டிருக்கும் உற்சாகம் மரச்சின்னத்தில் கேட்பதாகும். கடந்தமுறை யானை சின்னத்தில் போட்டியிட்டதால் வாக்காளரிடம் அதிருப்தி காணப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேர்தல் நடாத்தக்கூடாது என்பதில் ஜனாதிபதி படும்பாடு கட்சிகள்,அமைப்புக்கள் உயர்நீதிமன்றம் சென்று உத்தரவு கேட்கும் நிலைமை,மாத்திரமல்ல
தேர்தல் நடக்காது என்றநிலவரம் நாட்டிலே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும்,
அட்டாளைச்சேனை பிரதேசசபை அதிகாரம் ஸ்ரீ.மு.கா போட்டியிட்டது முதல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது.
இந்த மண்ணின் ஆட்சி தொடர்ந்தும் மரத்தின் கைகளில் இருக்கும் என்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு வேட்பாளர்களுக்கு இருக்கிறது.
மறைந்த தலைவர் 2000ம் ஆண்டு செய்த கைங்கரியம் எல்லோருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.
மாற்றுக்கட்சியில் உள்ளோரை கட்சிக்குள் கொண்டுவந்தார்.இதனை பெருவிழாவாக ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடத்தியதாகவும் தெரிவித்தார்.
புதிய உற்சாகம் கிழக்கில் மட்டுமல்ல பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.
இம்முறை 100 சபைகளில் போட்டியிடுகிறோம். 22 இடங்களில் ஐ.ம.ச பட்டியலில் போட்டியிடுகிறோம்.
கடந்த தேர்தலில் ஏறத்தாழ 11 சபைகளின் ஆட்சியை கைகளில் வைத்திருந்தோம்.இம்முறை அதற்கு மேலாகவும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.துரதிஷ்ட வசமாக நிச்சயமாக வெற்றி கொள்ளக்கூடிய கல்முனை மாநகரசபை தேர்தல் வழக்கினால் பிற்போட வேண்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் புரட்சி எல்லா கட்சிகளுக்கும் பெரிய பாடத்தை கற்றுத்தந்துள்ளது.
பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஆட்சி அமைத்தாலும், தவறான முடிவுகளினால் மக்களால் மீள அதிகாரம் பறிக்கப்பட்டுவிடும் என்ற அச்சம் எல்லோருக்கும் உருவாக்கப்பட்டுள்ளது.
என்னைப் பொறுத்தவரை எமது கட்சி ஆட்சியமைத்த எல்லா இடங்களிலும் நேர்மையாக ஆட்சி நடந்தது என்று நான் சொல்ல வரமாட்டேன்.பிழைகள் பிரச்சினைகள் இருந்தது.பிழைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கட்சி,போராட்டம்,கொள்கை சம்மந்தமாக இன்னும் தெரியாத புதிய பரம்பரை எம்மத்தியில் இருக்கிறார்கள்.
அட்டாளைச்சேனை பிரதேசம் பல்கலைக்கழகம், துறைமுகம்,
கல்வியல் கல்லூரி என்று பெரும் அடையாளம் இருக்கும் பிரதேசம் இவற்றை வடிவமைப்பதில் ஸ்ரீ.மு.கா பெரும் பங்களிப்பை செய்திருக்கிறது.
மாமூலான மாற்றம் செய்து ஏனைய கட்சிகள் மாதிரி அரசியல் செய்வதிலிருந்து நாங்கள் மாற்றமடைய வேண்டும்.கொள்கை அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட போராளியாக புதிய திக்கினை சூழல் தாக்கத்தினை உணர்ந்தவர்களாக மாறவேண்டும்.
அதிகாரம் எங்களுக்கு கிடைத்தாலும் கட்சிக்குள் எப்படி ஒழுக்கம் இருக்கும் என்பதையும் மக்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு கட்சி கறாராக இருக்கும்.கடந்த காலங்களில் மெத்தனப்போக்குடன் நடந்திருக்கிறோம்.கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்,
பதவியில் இருப்பவர்கள்,உதாசீனம் செய்பவர்களுக்கு கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாற்றுக்கட்சி சார்ந்த பலர் ஸ்ரீ.மு.காங்கிரேஸில் மீண்டும் இணைந்து கொண்டதுடன் பெருவாரியான ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.