பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் பொலிஸ் குடியிருப்புகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் உள்ள பள்ளிவாசலில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தார்.
பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டுகள் வெடித்ததில் தொழுகை செய்து கொண்டிருந்த பலர் உடல் சிதறி பலியாகினர். மேலும் குண்டுவெடிப்பில் பள்ளிவாசலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கினர். இதனிடையே உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதல் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 100- ஆக உயர்ந்துள்ளது.
பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தானி தலீபான் பயங்கரவாத அமைப்பின் தளபதி உமர் காலித் குராசானி கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததற்கு பழிவாங்கும் வகையில் பள்ளிவாசலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாக உமர் காலித் குராசானியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.