(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
எனக்கு சொந்தமான காணியில் கஞ்சா பயிர்செய்கை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.
பொய் செய்தி வெளியிட்ட தரப்பிரனரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளேன்.
பொய்யான செய்தி வெளியிட்ட தேசிய பத்திரிகை பிரதானிகளை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறு என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகர் தலைமையில் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக வலைத்தளங்களில் பிரபல்யமடைவதற்காகவும்,பணம் சம்பாதிப்பதற்காகவும் ஒரு தரப்பினர் உண்மைக்கு புறம்பாக செய்திகளை வெளியிடுகிறார்கள்.
பொய்யான செய்தியால் பாதிக்கப்படும் தரப்பினருக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பில் அவர்கள் சிந்திப்பது இல்லை.
சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடு ஏதும் இல்லாத காரணத்தினால் தான் விரும்பியதை பதிவேற்றம் செய்யலாம் என்ற நிலை சமூக வலைத்தள பாவனையாளர்கள் மத்தியில் காணப்படுகிறது.
காடழிப்பு,இயற்கை வளங்கள் அழிப்பு சட்டவிரோத செயற்பாடுகளுடன் நான் தொடர்புப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஆரம்பத்தில் செய்திகள் வெளியாகின.
இந்த செய்தி தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தேன்,ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை,பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளித்துள்ளேன்.
இவ்வாறான பின்னணியில் தற்போது எனக்கு சொந்தமான காணியில் எனது மேற்பார்வையின் கீழ் கஞ்சா பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களிலும்,ஒருசில தேசிய பத்திரிகைகளிலும் உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளன.இந்த செய்தி முற்றிலும் அடிப்படையற்றதாகும்.
இந்த போலி செய்தியால் பாராளுமன்றத்தின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.திட்டமிட்ட வகையில் பாராளுமன்றத்தையும்,அரசியல் கட்டமைப்பையும் மலினப்படுத்தும் வகையில் செய்தி வெளியிடும் தரப்பினருக்கு இந்த செய்தி சாதகமாக காணப்படுகிறது.
போய் பொய்யான செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனங்களுக்கு எதிராக 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தியுள்ளேன்.
வெளியான செய்தியில் பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரி ஒருவர் தகவல் வழங்கியதாக குறிப்பிடப்படுகிறது. யார் அந்த உயர் அதிகாரி என்பது குறிப்பிடப்படவில்லை.
ஆகவே இச்செய்தியால் நான் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளேன்.எனது தரப்பு நியாயத்தை வெளிப்பத்துவது அவசியம்,ஆகவே இந்த செய்தியை வெளியிட்ட ஊடக நிறுவனங்களை பாராளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு அழைக்குமாறு கோரிக்கை விடுக்கிறேன்.