காலி முகத்திடல் போராட்டத்துடன் கைக்கோர்த்து, தமது வேலையை இழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களை, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் கைவிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
பேஸ்புக் லைவ் ஊடாக நேயர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போராட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், போராட்டத்தில் இணைந்து போராடி, தமது வேலையை இழந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு, புதிய வேலைகளை பெற்று தருவதாக போராட்டக்காரர்கள் உறுதி வழங்கிய போதிலும், இன்று அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளதாக நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்து, தலை கவசனத்தை கழற்றி வீசிய, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொலிஸ் அதிகாரி, வேலைகள் இன்றி மாணிக்கக்கல் அகழ்வு குழியில், கூலி வேலை செய்வது குறித்து தனக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், போராட்டம் இடம்பெற்ற காலப் பகுதியில் அவருக்கு 75,000 ரூபா மாதாந்த சம்பளத்திற்கு வேலை தருவதாக போராட்டக்காரர்கள் அப்போது உறுதி வழங்கிய போதிலும், அந்த உறுதி மொழியை போராட்டக்காரர்கள் நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சுமத்துகின்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டோர், குறித்த நபருக்கு வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுத்தால் சிறந்தது என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
மேலும், விசேட அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அடுத்த நாளே தனது தொழிலை இழந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, போராட்டத்தில் ஈடுபட்ட மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது கல்விக்காக உதவி செய்யுமாறும், இல்லையென்றால், தொழில்வாய்ப்பை பெற்று தருமாறும் கோரியுள்ளதாக நாமல் ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.
போராட்ட காலத்தில் அனைவரும் ஒன்றாக இருந்ததை போன்று, போராட்டத்திற்கு பின்னரும் ஒன்றாக இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றி நியாயத்தை பெற்றுக்கொடுக்குமாறும் நாமல் ராஜபக்ஸ, காலி முகத்திடல் போராட்டக்காரர்களிம் கோரிக்கை விடுக்கின்றார்.