Our Feeds


Tuesday, January 17, 2023

ShortNews Admin

VIDEO: நான் குற்றமற்றவன் - 10 கோடி இழப்பீடுதான் கொடுக்க வேண்டும் - தண்டப்பணம் அல்ல - மைத்திரி கூறும் விளக்கம்.



(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)


ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் அதிகாரிகள் தவறிழைக்கும் போது அதற்கு ஜனாதிபதி பொறுப்பானவர் என்ற ரீதியிலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன். 10 கோடி ரூபா நட்டஈடே தவிர தண்டப் பணம் அல்ல என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வழக்கு தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில்   பல்வேறு கருத்துக்களை பலரும் கூறி வருகின்றனர். அது பற்றி இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

நான் பாராளுமன்றத்திற்கு 1989 இல் வந்தேன். அப்போது விடுதலைப் புலிகளின் யுத்தம் உள்ளிட்ட பல்வேறு அமைதியின்மை நிலவின.

அப்போது பெருமளவானவர்கள் உயிரிழந்தனர். இராணுவத்தை சேர்ந்த பலர் இறந்ததுடன் விமானங்கள் பலவும் அழிக்கப்பட்டன. அது மாத்திரமன்றி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குண்டுத் தாக்குதலில் கண்ணை இழந்தார். 

அதேபோன்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா  குண்டுத் தாக்குதலுக்கு இலக்கானார். இவ்வாறு பல சம்பவங்கள் நடந்தன.

அப்போது அவர்களால் அந்த அனர்த்தங்களை தடுக்க முடியாது இருந்தன. இப்படி இருக்கையில் என்னால் தடுக்க முடியும் என்று கூற முடியாது.

 விடுதலை புலிகள் அமைப்பு தோற்றம் பெற்ற காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு காலம் வரை ஆட்சியில் இருந்த அரச தலைவர்களின் நிர்வாகத்தில் குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

பலர் உயிரிழந்தர்கள்,அரச சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டது,இந்த இழப்புகளுக்கு அவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்கள் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நான் சிறைக்கு செல்ல வேண்டும் என குறிப்பிடுகிறார்கள்.

பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டாத காரணத்தினால்  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என குறிப்பிடப்படுகிறது.

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாதுகாப்பு சபை கூட்டம் முறையாக கூடப்படவில்லை.2015 ஆம் ஆண்டில் இருந்து அடிக்கடி பாதுகாப்பு சபையை கூட்டினேன். 

தேவையான நேரத்தில் நான் அதனை கூட்டியுள்ளேன். ஒரு வருட காலமே பொலிஸ் தொடர்பான அமைச்சு வழங்கப்பட்டிருந்தது.

இதன்போது தேவையான நேரத்தில் மாதாந்தம் நான் அதிகாரிகளை அழைத்து கூட்டங்களை நடத்தி பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் கதைத்தேன்.

இதன்படி நான் பாதுகாப்பு சபையை கூட்டிய காலத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் உலகில் பல இடங்களிலும் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் கூறியிருந்தனர். இதன்போது இந்த நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற இடமளிக்கக் கூடாது என்று பாதுகாப்பு தரப்பினருக்கு ஆலோசனை வழங்கி நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு உத்தரவிட்டிருந்தேன்.

 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி நான் பொலிஸ் அதிகாரிகளை அழைத்தேன். அப்போது அவர்களில் எவரும் குறித்த சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து கூறவில்லை.

4 வருடங்களாக தற்போதைய ஜனாதிபதி தரப்பை சேர்ந்தவர்களே பொலிஸ் தொடர்பான அமைச்சுக்கு பொறுப்பாக இருந்தனர்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை போன்று பிறிதொரு சம்பவத்தினால் நான் பாதிக்கப்படவில்லை. இழப்புகளை ஒருபோதும் மீட்க முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நாட்டில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இவ்வாறான நிலைமையில் நீதிமன்ற தீர்ப்புக்கு நான் தலைசாய்கின்றேன். 

எனினும் அந்த தீர்ப்பில் 10 கோடி ரூபா நஷ்ட ஈட்டை வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழுள்ள அதிகாரிகள் தவறிழைக்கும் போது ஜனாதிபதியே பொறுப்பு இதன்படியே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இது எனக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணம் அல்ல. என்னிடம் அந்தளவு பணம் இல்லை. நான் சொத்து விபரங்களை முன்வைத்துள்ளேன். ஜனாதிபதி காலத்திலும் அதனை முன்வைத்தேன். அதில் எனக்குள்ள சொத்துக்கள் தொடர்பில் கூறப்பட்டுள்ளன.

இதனால் உண்மைகளை புரிந்துகொண்ட மக்களிடம் இருந்து உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றேன்.

நான் அதிகாரிகளை நியமிப்பதால் அதற்கு நானே பொறுப்பாகும். இதற்கமையவே என்னைப் பற்றி இவ்வாறான தீர்ப்பு வழங்கப்பட்டது. இல்லாவிட்டால் நான் இதில் நிரபராதியாகவே இருந்திருப்பேன்.

நீதிமன்ற தீர்ப்பில்  தாக்குதல் தொடர்பிலான தகவல்களை ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

புலனாய்வு தகவல்கள் எனக்கு கிடைக்கவில்லை என்று உயர்நீதிமன்றம் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது இது நான் குற்றறமற்றவர் என்பதனை சுட்டிக்காட்டியுள்ளது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »