Our Feeds


Monday, January 9, 2023

Anonymous

ஐ.தே.க SLPP இணைந்து போட்டியா? பசிலுடனான பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

 



(இராஜதுரை ஹஷான்)


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இரு அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு இவ்வாரத்தில் உத்தியோகபூர்வ தீர்மானத்தை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விடுத்துள்ளார்.

இதற்கமைய  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (8) இரவு இடம்பெற்ற விசேட சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, சாகல காரியவசம், ரவி கருணாநாயக்க, பாலித ரங்கே பண்டார, ருவான் விஜேவர்தன மற்றும் அகில விராஜ் காரியவசம் ஆகியோரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, சஞ்ஜீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் தற்போதைய நிதி நிலைமை, சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உள்ளிட்ட அரசியல் விடயங்கள் தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் அவதானம் செலுத்தப்பட்டது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மொட்டு சின்னத்தில் போட்டியிட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும்பாலான தேர்தல் தொகுதியில் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுமாறு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைந்து அரசியல் கூட்டணி அமைப்பது தொடர்பில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பது அவசியமாகும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைந்து  செயற்படுத்த இரு தரப்பினரும்  இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையிலான புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் இரு அரசியல் கட்சிகளின் மாவட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொண்டு இவ்வாரத்தில் உத்தியோகபூர்வ தீர்மானத்தை எடுக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »