அஹமட்
உள்ளூராட்சித் தேர்தலில் பொதுஜன பெரமுன (தாமரை மொட்டு) கட்சி – கிழக்கில் ஏ.ல்எ.ம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் ‘குதிரை’ச் சின்னத்தில் இணைந்து போட்டியிடுவதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ள நிலையில், அதனை தேசிய காங்கிரஸ் மறுத்துள்ளது.
தலதா மாளிகையில் வழிபட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் நேற்று (24) பேசிய – பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ; தமது கட்சி 252 உள்ளுராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுவதாக கூறினார்.
“யாழ்ப்பாணத்தில் வீணைச் சின்னத்திலும், கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பில் படகு சின்னத்திலும், குதிரைச் சின்னத்திலும் இணைந்து நாங்கள் போட்டியிடுகிறோம்” எனவும் பசில் ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டார்.
இவ்விடயம் குறித்து தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினயவி போது, பசில் ராஜபக்ஷ தெரிவித்த விடயத்தை நிராகரித்தார்.
“அவர் பழைய நினைவில் அப்படிக் கூறியுள்ளார் போலுள்ளது. எந்தவொரு இடத்திலும் பொதுஜன பெரமுனவுடன் தேசிய காங்கிரஸ் இணைந்து போட்டியிடவில்லை. விரைவில் தேசிய காங்கிரஸ் ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளது. அப்போது இது குறித்து தெளிவுபடுத்துவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.