முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழிக்கப்பட்டுள்ள மார்க்கத்திற்கு முரணானதும், முஸ்லிம் சமூகத்தை மேலும் பல சிக்கல்களுக்குள் தள்ளி விடுவதுமான; பெரும்பான்மை முஸ்லிம்களின் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத திருத்தங்களைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி ஒன்று புத்தளம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
புத்தளம் ஜம்மியத்துல் உலமா, புத்தளம் மொஹிதீன் ஜும்மாப் பள்ளிவாயல் மேலும் பல சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒழுங்கு செய்த இந்தப் பேரணியில் பெருந்திரளான புத்தள மக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்; மார்க்கத்திற்கு முரணான சட்ட திருத்தங்களை அனுமதிக்க முடியாது என்றும், மார்க்க அறிஞர்களின் வழிகாட்டலிலேயே முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டுமெனவும், மேலும் இந்த விடயத்தில் புத்தளத்தின் பெயர் தொடர்ச்சியாகப் பிழையாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. அங்கு உரையாற்றியவர்கள்; சில அரச சார்பற்ற நிறுவனங்கள் வழங்கிய தவறான தகவல்களின் அடிப்படையில் முன்னாள் நீதி அமைச்சரும், தற்போதய நீதி அமைச்சரும் புத்தளத்தைச் சுட்டிக்காட்டிப் பேசி இருப்பதை மேற்கோள்காட்டி; தொடர்ந்தும் இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த புத்தள மக்களின் கருத்து எனக் கொள்ளப்படுவது கூடாது என்றும், குறித்த அரச சார்பற்ற நிறுவனங்களின் கோரிக்கைகளுக்குப் புத்தள மக்கள் உடன்பாடானவர்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தி உரையாற்றினர்.
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் திருத்தப்படுகின்ற போது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் பதாகைகள் தாங்கி மக்கள் அணிவகுத்திருந்தனர்.
அத்தோடு பேரணியின் பிரகடனம் ஒன்றும் வாசிக்கப்பட்டது.