Our Feeds


Saturday, January 7, 2023

ShortNews Admin

‘அல்-அக்ஸா மசூதியை யூதக் கோயிலாக மாற்ற முயற்சி’ - இஸ்லாமிய நாடுகள் கொந்தளிப்பு. - OIC யும் கடும் எச்சரிக்கை!



இஸ்ரேல் நாட்டின்  பாதுகாப்பு அமைச்சரும், தீவிர வலதுசாரி தலைவருமான இட்மர் பென் கிவிர் அண்மையில் ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்றார். இஸ்லாமிய நாடுகள் இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.


பாலஸ்தீனம் இதை  ஒரு "ஆத்திரமூட்டும்" நடவடிக்கை என்று கூறியுள்ளது. பெஞ்சமின் நெதன்யாகு பிரதமராகப் பதவியேற்று ஒரு வாரம் கூட நிறைவடையாததாலும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்து வரும் சர்ச்சை மீண்டும் ஆழமடையத் தொடங்கியிருப்பதாலும் இந்த சுற்றுப்பயணம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 


சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளுடன், சீனாவும் இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன்  ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.


பாதுகாப்பு அவையில் அல்-அக்சா மசூதி தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பதற்றத்துக்கு கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடவடிக்கை எடுக்கப்போவதாக எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை.


அல்-அக்ஸா மசூதி, மெக்கா மற்றும் மதீனாவிற்கு அடுத்தபடியாக இஸ்லாத்தில் மூன்றாவது புனிதமான இடமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், இது யூதர்களுக்கும் மிகவும் புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.


மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேமை 1948 முதல் 1967 இல் நடந்த ஆறு நாள் போருக்கு முன் வரை ஜோர்டான் ஆட்சி செய்து வந்தது.  இந்தப் போருக்குப் பிறகு, இஸ்ரேல் இந்த பகுதியில் தனது மேலாதிக்கத்தை நிறுவியது.


இருப்பினும், ஜோர்டானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் கீழ், ஜெருசலேமின் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மத தளங்களைக் கண்காணிக்க ஜோர்டானுக்கு உரிமை கிடைத்தது.


யூதர்கள் மசூதி வளாகத்திற்குள் நுழையலாம் ஆனால் பிரார்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இட்மர் பென் கிவிரின் இந்த விஜயத்தை பாலத்தீனியர்கள் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியாகப் பார்க்கின்றனர்.


அல்-அக்ஸா மசூதி இஸ்ரேல் மற்றும் பாலத்தீனியர்களுக்கு ஏன் மிகவும் முக்கியமானது என்பதை இங்கு தெரிந்து கொள்வது அவசியம்.


கிழக்கு ஜெருசலேமில் அமைந்துள்ள இது யூதர்களின் மிகவும் புனிதமான இடமாகும், மேலும் இது இஸ்லாத்தின் மூன்றாவது மிகவும் புனிதமான இடமாகவும் கருதப்படுகிறது.


யூதர்களுக்கான 'டெம்பிள் மௌண்ட்' என்றும், முஸ்லிம்களுக்கு 'அல்-ஹராம் அல்-ஷரீஃப்' என்றும் அழைக்கப்படும் இப்புனித தலத்தில் 'அல்-அக்ஸா மசூதி' மற்றும் 'டோம் ஆஃப் தி ராக்' ஆகியவையும் அடங்கும்.


'டோம் ஆஃப் தி ராக்' யூத மதத்தில் புனிதமான தலம் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முஹம்மது நபியுடன் தொடர்பு இருப்பதால்,  'டோம் ஆஃப் த ராக்' புனித இடமாக முஸ்லிம்களும் கருதுகின்றனர்.


இந்த மத ஸ்தலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களின் பிரார்த்தனை தடைசெய்யப்பட்டுள்ளது.


இந்த வளாகம் ஜோர்டானின் வக்ஃப் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேலால் கட்டுப்படுத்தப்படுகின்றன.


நீண்ட காலமாக இங்கு முஸ்லீம்கள் மட்டுமே பிரார்த்தனை செய்ய முடியும். மேலும்,  முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் இங்கு பிரார்த்தனை செய்ய முடியாது.


சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் இஸ்ரேலிய அமைச்சரின் வருகைக்குக் கண்டனம் தெரிவித்தது, இது 'ஆத்திரமூட்டும்' செயல் என்று கூறியுள்ளது. அதே நேரத்தில், பாலத்தீனத்திற்கான தனது ஆதரவு நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.


இஸ்ரேலிய அமைச்சரின் இந்த நடவடிக்கை சர்வதேச சமாதான முயற்சிகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும், இது மதம் தொடர்பான விஷயங்களில் சர்வதேச கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாகவும் சவுதி கூறியுள்ளது.


இஸ்ரேல் அமைச்சரின் வருகையை ஜோர்டான் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இது சர்வதேசச் சட்டங்களை மீறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் சினான் மசாலி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த நடவடிக்கையின் கடுமையான விளைவுகளுக்கு இஸ்ரேல் மட்டுமே பொறுப்பாகும்" என்றார்.


ஜோர்டான் இஸ்ரேலின் தூதரை வரவழைத்துத் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. 


அதேநேரம், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் பல தசாப்தங்களாக நிலவி வரும் நடைமுறையை மீறுவது பாலஸ்தீனப் பகுதிகளில் மட்டுமின்றி, அந்தப் பிராந்தியத்திலேயே அமைதியின்மையை உருவாக்கும்  என்று லெபனானின் ஆயுதமேந்திய தீவிரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.


காசா பகுதியில் ஒரு முக்கிய மத்தியஸ்த நாடாகச் செயல்படும் எகிப்தின் வெளியுறவு அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கை என்று விவரித்துள்ளது.


அதேநேரம், இந்த சுற்றுப்பயணத்தின் பின்னர் முஸ்லிம் நாடுகளின் எதிர்வினையை இஸ்ரேல் எதிர்கொள்ள வேண்டும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி கூறுகையில், பாலஸ்தீனத்தின் அல் அக்ஸா உள்ளிட்ட புனித தலங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல், சர்வதேச விதிகளை மீறியதற்கும், முஸ்லிம்களின் விழுமியங்களை அவமதிப்பதற்கும் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.


அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் "ஆபத்தான மற்றும் ஆத்திரமூட்டும் மீறல்களை நிறுத்த வேண்டும்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலிய அதிகாரிகளை 'செயல்பாடுகளைக் குறைத்துக்கொள்ளவும்' பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் எந்த நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.


அல்-அக்ஸா மசூதியின் தற்போதைய நிலையை மாற்றும் முயற்சியாக இஸ்ரேலிய அமைச்சரின் வருகையை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) வர்ணித்துள்ளது.


கிவிரின் வருகையை கண்டித்து OIC, "அல்-அக்ஸா மசூதியின் தற்போதைய வரலாற்று மற்றும் சட்ட நிலையை மாற்ற இஸ்ரேலின் முயற்சிகளின் ஒரு பகுதி இது" என்று கூறியுள்ளார்.


இதே வேலை சிவப்புக் கோட்டைத் தாண்ட வேண்டாம் என்று ஹமாஸ் எச்சரிக்கை. 


பாலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ், இட்மர் பென் கிவிர் வருகைக்கு முன்னதாகவே இதுபோன்ற செயல் 'சிவப்புக் கோட்டை' தாண்டுவதற்கு சமம் என்று எச்சரித்திருந்தது.


இந்த விஜயத்தை ஒரு "குற்றம்" என்று வர்ணித்த ஹமாஸ், புனித தலம் எப்போதும் "பாலஸ்தீனியர்கள், அரேபியர்கள் மற்றும் இஸ்லாம்" ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அவரது வருகையின் போது இங்கு காவிர் பிரார்த்தனை செய்தாரா இல்லையா என்பது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை.


"டெம்பிள் மௌண்ட் அனைவருக்கும் திறந்திருக்கும், ஹமாஸ் என்னை மிரட்ட முடியும் என்று நினைத்தால், காலம் மாறிவிட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஹமாஸ் அச்சுறுத்தல்களுக்கு சரணடையும் அரசாங்கம்  இல்லை. டெம்பிள் மவுண்ட் இஸ்ரேல் மக்களுக்கு மிக முக்கியமான தளம். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான பிரார்த்தனை சுதந்திரத்தை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் யூதர்களுக்கும் அங்கு செல்ல உரிமை உண்டு."  என்று விஜயத்திற்குப் பிறகு, பென் கிவிர் ட்வீட் செய்துள்ளார்.


கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலின் போது, இந்தப் புனித தலத்தில் யூதர்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கோரிக்கை விடுப்பதாக பென் கிவிர் கூறியிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »