(எம்.எம்.சில்வெஸ்டர்)
மக்கள் ஆணையைப் பெற்று இந்த அரசாங்கத்தை கவிழ்ப்போம் என்றும் அதற்காக சகல பிரிவினரையும் ஒன்று திரட்டிக்கொண்டு இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இன்று (16) நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனாதிபதிக்கு எந்த திட்டமும் இல்லை, விசித்திரக் கதைகள் கூறுகிறார். மக்கள் ஆணையால் இந்த அரசாங்கம் கவிழ்க்கப்படும்.
மக்கள் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இன்னுமொரு மக்கள் புரட்சியை ஏற்படுத்துவோம். ஊழல் ஆட்சி விரட்டப்படும்.
யானை - மொட்டு கூட்டணியின் திருமணம் நாட்டுக்கு இறுதி சடங்காக மாறியுள்ளது. ஊழல் அரசியல்வாதிகளற்ற நாடொன்று கட்டி அமைக்கப்படும்.
இரண்டாவது போராட்டத்திற்கான பலமான அடித்தளமொன்று அமைக்கப்படும். சகல பிரிவினரையும் ஒன்று திரட்டி வீழ்த்த முடியாத போராட்டமொன்றை முன்னெடுப்போம். அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு சிறகும் வால் மற்றும் தான் குறைவு" என்றார்.