Our Feeds


Friday, January 13, 2023

ShortNews Admin

நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல. - முஸ்லிம் அமைப்புகளில் பங்கேற்க இளம் பிள்ளைகளை ஊக்குவியுங்கள். - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் MP



கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பொதுச் செயற்பாடுகளிலும் பொது அமைப்புக்களிலும் பங்குபற்றுவதில் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.


நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். இந்த முஸ்லிம் லீக்கின் இளைஞர் பிரிவு சுதந்திரப் போராட்ட வீரர்களான டாக்டர் டி.பி.ஜாயா, டாக்டர்.எம்.சி.கலீல் போன்றோருடன் பதியுதீன் மஹ்மூத், பலீல் கபூர், எம்.ஏ. பாக்கிர் மாக்கார் ஆகியோருடன் தொடங்குகிறது. கொழும்புடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த முஸ்லிம் லீக் இளைஞர் பிரிவு 1969 இல் நாடு தழுவிய முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சம்மேளனமாக மாறியது.


நாங்கள் இந்நாட்டின் இரண்டாவது குடிமக்கள் அல்ல. சுதந்திரம் பெறுவதற்கான போராட்டத்தில் இந்நாட்டில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு முக்கியமானதாக இருந்த தருணத்தில் கலாநிதி டி.பி.ஜாயா அவர்கள் கூறிய வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்து எனக்கு நினைவிற்கு வருகின்றது. அந்தத் தருணத்தில் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் நிலைப்பாடு சுதந்திரத்திற்கான தீர்மானகரமான காரணியாக அமைந்திருந்தது. அத்தருணத்தில் இந்நாட்டு முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி டி.பி. ஜாயா இவ்வாறு தெரிவித்தார்.


 “இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கு குறைபாடுகள் உள்ளன, பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவற்றைப் பற்றி பேசுவதற்கு இது நேரமல்ல. இப்போது சுதந்திரத்தின் சவாலை முறியடிக்க ஒன்றிணைந்து செயல்படுவோம்.


சுதந்திரத்திற்குப் பின்னர் எமது மூத்த சகோதரர்களான சிங்களத் தலைவர்களுடன் கலந்துரையாடி எங்களுக்கு எமது தேவைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். “இன்றும் இந்தக் கூற்று இந்நாட்டு முஸ்லிம் மக்கள் பயணிக்க வேண்டிய பாதைக்கான ஒரு கலங்கரை விளக்காக பிரகாசிக்கிறது. இந்த முஸ்லிம் அமைப்புகளில் பங்கேற்க தங்கள் இளம் பிள்ளைகளை ஊக்குவியுங்கள். இனி நாம் ஒதுங்கிய போக்கில் செயற்பட வேண்டியதில்லை.


நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் அல்ல. நாங்கள் இலங்கை குடும்பத்தின் சம அந்தஸ்துள்ள அங்கத்தவர்கள். சந்தேகம் அச்சத்தை விடுத்து நாட்டு நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்.


களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »