(என்.வீ.ஏ.)
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவர் ஜே. ஸ்ரீ ரங்கா தலைமையிலான நிருவாக சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ கடமைகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த உத்தரவு நாளைய தினம் வரை அமுலில் இருக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம், புதிய நிருவாக சபைக்கு இந்த இடைக்கால தடையை விதித்துள்ளது.
கடந்த ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த தன்னை, கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிட விடாமல், தன்னை தேர்தல் மண்டபத்திலிருந்து வெளியேற்றியதன் மூலம் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது என தெரிவித்து, புதிய நிருவாக சபைக்கு இடைக்கால தடை விதிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஜஸ்வர் உமர் நேற்றைய தினம் மனு தாக்கல் செய்திருந்தார்.
தலைவர் பதவிக்கு போட்டியிடவிருந்த தனக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் ஜஸ்வர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜே. ஸ்ரீ ரங்கா தலைமையிலான நிருவாக சபை உத்தியோகபூர்வமாக பதவியேற்ற பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதாக அறிய கிடைக்கிறது.
எவ்வாறாயினும், அவ்வாறானதொரு நீதிமன்ற உத்தரவு இன்று புதன்கிழமை (18) பிற்பகல் 3 மணி வரை தமக்கு கிடைக்கவில்லை என புதிய நிருவாக சபை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.