இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், சிஎன்என் டிராவலின் பரிந்துரைப்படி, ஆசியாவிலேயே மிகவும் தரப்படுத்தப்படாத 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தை பற்றி விபரிக்கும் சிஎன்என் டிராவல் வழிகாட்டித்தளம், பெரும்பாலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் அழகிய தென் கடற்கரை அல்லது மத்திய மலைநாட்டிற்குச் செல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த இரண்டு பிரதேசங்களுக்கும், கொழும்பு நகரத்திலிருந்து செல்வது மிகவும் எளிதானது.
எனினும், இலங்கையின் வடக்குப் பகுதிக்கு, சில சமயங்களில் சவாலான மகிழுந்து அல்லது பேருந்து பயணங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணம், நாட்டின் தமிழ் பேசும் மக்களின் முதன்மையான தாயகமாகும்.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளை கட்டடக்கலையுடன் தமது பயணத்தை ஆரம்பிக்குமாறு சிஎன்என் டிராவல் வழிகாட்டித்தளம் கூறுகிறது.
அலங்கரிக்கப்பட்ட, பிரகாசமான தங்க நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் யாழ்ப்பாண நூலகம் இரண்டும் முக்கியமானவையாகும்.
இதனையடுத்து யாழ்ப்பாண உணவுகள் பற்றிக் குறிப்பிடும் சிஎன்என் சுற்றுலா வழிகாட்டித்தளம், வாழைப்பழங்கள், மாம்பழங்கள், கறிகள், ஊறுகாய்கள் மற்றும் அரிசி உணவுகளுடன் சேர்த்து, மலிவு உணவுகள் அங்கு கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்தியாவில் மெகாலயா, மலேசியாவில் ஈப்போ, தாய்லாந்தில் இசான், சீனாவில் லெஷான் மற்றும் டெங்சோங், பாகிஸ்தானில் ஸ்கோர்ட், சிங்கப்பூரில் புலாவ் உபின் உள்ளிட்ட மேலும் பல இடங்கள், ஆசியாவில் சிஎன்என் டிராவல் பட்டியலிடப்பட்ட மிகவும் தரப்படுத்தப்படாத பிற இடங்களாகும்.