உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடையும் எனக் கூற முடியாது. அதே போன்று பொருளாதார வளர்ச்சியிலும் இந்த தேர்தல் எந்த வகையிலும் தாக்கம் செலுத்தாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்தால் அதற்கமைய செயற்படுவதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். எவ்வாறிருப்பினும் தேர்தலை நடத்துவதால் பொருளாதார நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கும் எனக் கூற முடியாது. அதே போன்று பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்த தேர்தல் தீர்வாகவும் அமையாது.
காரணம் இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாத்திரமின்றி , தோல்வியடைந்தவர்களும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக செயற்படுவர். தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கலே இதற்கான காரணமாகும்.
எனவே தான் இந்த தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்தி செய்து , 8000 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு சிறந்த தீர்வாகும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
இலங்கை வரலாற்றில் பாரதூரமான பொருளாதார நெருக்கடிகளை தற்போது நாம் எதிர்கொண்டுள்ளோம். இவ்வாறு 2022 ஆம் ஆண்டைக் கடந்துள்ளோம். அதே போன்ற கடினமான சூழலுக்கு மத்தியிலேயே இவ்வாண்டையும் கடக்க வேண்டியுள்ளது என்றார்.