(எம்.வை.எம்.சியாம்)
வங்குரோத்து நிலையில் உள்ள நமது நாட்டில் 220 இலட்சம்
மக்கள் தமது பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்களிடம் தீர்வைக் கேட்டு நின்றாலும் தற்போதைய அரசாங்கம் அந்தப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வையும் வழங்கவில்லை.அரசாங்கமும் போலவே சில கட்சி அரசியல் தரப்பினரும் தமது அரசியல் மேடைகளிலும், மாநாடுகளிலும், ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் பல்வேறு விமர்சனக் குரலை எழுப்பிக் கொண்டு இருந்தாலும் இறுதியில் அவை வெறும் பேச்சுக்களாகவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பிரயோக ரீதியாக நடைமுறைக்கு வந்த பாடில்லை. இந்நிலையில் நாட்டு மக்கள் அரசியல் அதிகாரத்தை வழங்கினால் சுமையின்றி வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்க தாம் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய வரிசைப்படுத்தல் படையணியின் களுத்துறை மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (15) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண பணம், வளங்கள் மற்றும் அந்நிய செலாவணி தேவைப்பட்ட போதிலும் தற்போதைய அரசாங்கத்தால் மக்களின் கோரிக்கைகளுக்குத் தேவையான பொருட்கள் விநியோகத்தைக் கூட வழங்க முடியவில்லை.
அவர்கள் இயலுமையற்றவர்கள் என்பதால் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் சேருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் கொள்கையளவில் அதை தாம் நிராகரித்தோம்.
சுவாரசியமான, வேடிக்கையான, ஆர்வத்தைத் தூண்டும் பேச்சுக்களைக் கூறும் நபர்களை விட நடைமுறை ரீதியாக மக்களுக்கு சேவையாற்றுபவரே இவ்வேளையில் நாட்டுக்கு தேவை. கடந்த 2105 ஆம் ஆண்டு சுனாமி நிவாரண நிதியை திருடியவரை நாட்டின் ஆட்சியாளராக மாற்றுவதற்கு அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே என்று கூறும் தரப்பே உதவியது.
அதை மக்கள் மறந்து விடவில்லை. அரச அதிகாரம் இல்லாவிட்டாலும் மக்களுக்கு சேவையாற்றும் போது தம்மை கேலி செய்பவர்களை அதிகாரம் இல்லாவிட்டாலும் தன்னுடன் போட்டியாக மக்களுக்கு சேவை செய்ய முன் வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறேன்
மக்களின் பிரச்சினைகளை வார்த்தைகளை விட செயலால் யாரால் தீர்க்க முடியும் என்பதை மக்கள் தங்கள் அறிவாற்றலால் தீர்மானிக்க வேண்டும். நான் ஆங்கில மொழியைக் கையாளும் விதத்தை அவமதிக்காமல் மக்களுக்குச் சேவை செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறேன். தனக்கும் தனது குழுவிற்கும் அரசியல் அதிகாரத்தை மக்கள் வழங்கினால் உலகிற்கு சுமையின்றி வாழ்வதற்குத் தேவையான சூழலை உருவாக்கித் தருவோம்
இந்த நேரத்தில் நம் நாட்டுக்கு தேவைப்படுவது டொலர்கள், யூரோக்கள் மற்றும் பவுண்கள் ஆகும். அதற்கான நடைமுறை வேலைத்திட்டமொன்று தேவை. 74 வருட வரலாற்றில் இந்த நாட்டில் எந்த எதிர்க்கட்சியும் செய்யாத பணியை தற்போதைய எதிர்க்கட்சி செய்திருப்பதனால் மக்கள் இது குறித்து புத்திசாலித்தனமாக சிந்தித்து அடுத்த தேர்தலில் முடிவெடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.