(எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இல்லை என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடனான வர்த்தமானி அறிவிப்பு, அச்சிடுவதற்காக இதுவரை அச்சக கூட்டுத்தாபனத்துக்கு அனுப்பப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பொன்றை விடுத்திருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஆணைக்குழுவின் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானியில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இல்லை. இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும்.
அதன் பிரகாரம் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க தேவையான வர்த்தமானி அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அச்சிடப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்றார்.