தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் பங்களிப்புடன் வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து, பெருந்தோட்ட மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நேரடியான தலையீடுகளை வழங்கினார்.
வடக்கில் உள்ள மக்களின் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு காணத் தொடங்கியுள்ள நிலையில், பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.