திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் புத்த கயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழுவே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தலாய் லாமாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இந்த நிலையில் தலாய் லாமாவின் விஜயம் அமையுமாயின் இலங்கை மீட்சி பெறும் என தாங்கள் நம்புவதாக பௌத்த குழு குறிப்பிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 27 திகதி புத்த கயாவில் பௌத்த ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவை இலங்கையின் உயர்மட்ட பௌத்த பிக்குகள் குழு சந்தித்தது. அதேபோன்று அன்றைய நாட்களில் புத்த கயாவில் பெரும் திரளான உள் நாட்டு வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர்.
தலாய் லாமா ஏன் இந்தியாவிற்கு வந்தார்? பெரும் திரளான பன்னாட்டு மக்களும் ஏன் இங்கு வருகின்றனர் போன்ற விடயங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர் ஏ.என்.ஐ செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போது குறிப்பிட்டிருந்தார்.
தலாய் லாமாவின் புனிதத்திற்கு இந்தியா உதவியது. இதன் காரணமாகவும் அவரது புனிதத்துவத்தின் பிரகாரமும் இன்று இந்தியாவிலும் புத்த கயாவிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். கடும் குளிர் மிக்க இந்த நாட்களில் பொதுவாக மக்கள் வருவதில்லை. ஆனால் தலாய் லாமாவின புனிதத்தால் மக்கள் வருகின்றார்கள். இதனால் புத்தகயா பல வழிகளில் பயனடைகிறது என குறிப்பிட்ட ஸ்ரீ சம்புத்த சாஸனோதய சங்க சபை தலைவர் வஸ்கடுவ மகிந்தவங்ச மகாநாயக்க தேரர், திபெத் பலன் பெற்றதா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.
எனவே தான் தலாய் லாமா இலங்கைக்கு விஜயம் செய்வது அனைத்து வகையிலும் நாட்டிற்கு நல் வழிகளை காட்டும். குறிப்பாக இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கவும் தலாய் லாமாவின் விஜயம் உதவும் என இலங்கை பிக்குகள் குழு குறிப்பிட்டுள்ளது.
தலாய் லாமா புத்த கயாவிற்கு சென்றது போல் இலங்கைக்கும் வர வேண்டும். அவர் இலங்கைக்கு வந்தால் பல ஆயிரக்கணக்கான பன்னாட்டு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். இது பொருளாதாரத்தை மேம்படுத்தும். ஏனெனில் இலங்கை நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. மேலும் அவர் இலங்கைக்கு வருவதால் நாங்கள் ஆசீர்வதிக்கப்படுவோம், பொருளாதாரமும் உயரும் எனவும் கூறினார்.
தலாய் லாமாவை சந்திப்பதற்கு இலங்கை ராமஞ்ஞ மகா நிகாயாவின் பிரதம பீடாதிபதி மகுலேவே விமல மகாநாயக்க உட்பட தேரர்களும் சென்றிருந்தனர். தலாய் லாமா ஒரு ஆன்மீகத் தலைவர். அவரை அங்கு சந்தித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். எங்களுக்கு ஆன்மீக செயல்பாடுகள் பற்றிய புரிதல் உள்ளது. எனவே, இலங்கையைச் சேர்ந்த மகா சங்கத்தினராகிய நாங்கள் அவரது புனிதத்துவத்தை கண்டு மகிழ்ச்சியடைந்ததாக ராமஞ்ஞ மகா நிகாயா கூறியது.
அஸ்கிரி பீடத்தின் தேரர் முருத்தேனிய தம்மரதன தேரர் கூறுகையில், உண்மையில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், புத்தர் ஞானம் பெற்ற இடமான புத்தகயா எங்கள் தாய்நாடு போன்றது. எனவே தான் இங்கு அதிக தடவைகள் வருகிறோம். இது எனது முதல் முறையல்ல. பல முறை வந்துள்ளேன். தலாய் லாமாவிடம் ஆசி பெறுவதற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான லாமாக்கள் மற்றும் துறவிகள் வந்துள்ளனர். அவர்களையும் சந்திக்கும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது என்றார்.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் அங்கு ஆயிரக்கணக்கான மக்களைக் கண்டோம். குறிப்பாக தலாய் லாமாவின் உரையைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். மறுப்புறம் அவருடைய போதனைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தோம். இந்த சந்தர்ப்பத்தை பெரும் அதிஷ்டமாகவே கருதுகிறோம் என்றார்.
இலங்கை 2022 இல் எதிர்கொண்ட நிதி நெருக்கடியிலிருந்து மீள முடியாது தீவு தேசத்தில் அரசியல் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. இதனால் இலங்கையால் ஒரளவிற்கு மூச்சு விட முடிந்தது என பௌத்த தேரர்கள் குழு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்த உயர்மட்ட இலங்கை பௌத்த பிக்குகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு, சவால்களை சமாளிக்க தங்கள் ஆன்மீகத் தலைவவரான தலாய் லாமாவை இலங்கைக்கு அனுப்புமாறும் கேட்டுக்கொண்டனர்.
எவ்வாறாயினும் திபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமாவை இதற்கு முன்னரும். இலங்கைக்கு அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களால் அது முடியாமல் போனது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தமையே இதற்கான காரணமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தலாய் லாமாவின் இலங்கை விஜயம் குறித்து பேசப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.