வில்பத்து பாதுகாப்பு வனப்பகுதியில் காடுகளை அழித்தமை தொடர்பான மனு தொடர்பில் தமக்கு எதிரான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறுகோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு இன்று வியாழக்கிழமை (19) மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கல்லாறு மற்றும் மறிச்சிக்கட்டு பிரதேசங்களில் காடுகள் வெட்டப்பட்டதால் சுற்றுச்சூழல் அழிவு ஏற்பட்டுள்ளதாக சுற்றாடல் நீதி மையம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தது.
2020 ஆம் ஆண்டு, இந்த ரிட் மனுவின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த வன அழிவு இடம்பெற்ற பகுதிகளில் தனது தனிப்பட்ட செலவில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ரிஷாத் பதியுதீனுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.