பாகிஸ்தானின் பிரபல சட்டத்தரணி ஒருவர், நீதிமன்றத்துக்குள் வைத்து மற்றொரு சட்டத்தரணியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பெஷாவர் மேல் நீதிமன்றத்தில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் உயர் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல் லத்தீப் அப்ரிடி (79) என்பவரே கொல்லப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்துக்குள் வைத்து, சட்டத்தரணி அப்ரிடி மீது, கனிஷ்ட சட்டத்தரணி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு அடி தூரத்தில் வைத்து, 6 தடவைகள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக இச்சம்பவத்தை நேரில் கண்ட மொஹம்மத் ரிஸ்வான் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான சட்டத்தரணி அட்னன் கான் அப்ரிடி, பின்னர் பொலிஸாரிடம் சரணடைந்தார்.
கொல்லப்பட்டவரும், சந்தேக நபர்களும் தூரத்து உறவினர்கள் ஆவர்.
சந்தேக நபரின் தந்தையின் கொலை தொடர்பில் சட்டத்தரணி அப்ரிடிக்கு எதிராக வழக்கு ஒன்று உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.