உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணியின் தலைவர் லயனல் மெஸியும் போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் எதிரெதிர் அணிகளில் மோதும் கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டி சவூதி அரேபியாவின் றியாத் நகரில் இன்று நடைபெறவுள்ளது.
றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8.00 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு) இப்போட்டி ஆரம்பமாகும்.
சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அண்மையில் இணைந்தார்.
இந்நிலையில், அல் நாசர் கழகம் மற்றும் சவூதிஅரேபியாவின் மற்றொரு பிரபல கழகமான அல் ஹிலால் கழக வீரர்கள் இணைந்த அணியொன்று, பிரான்ஸின் பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்துடன் மோதவுள்ளனர்.
அல் நாசர் கழகத்தில் இணைந்த பின் ரொனால்டோ விளையாடும் முதலாவது போட்டி இதுவாகும்.
பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் அணியில் லயனல் மெஸி, கிலியன் எம்பாப்பே, நெய்மார், அச்ரப் ஹக்கீமி ஆகியோரும் விளையாடவுள்ளனர்.
அல் நாசர் மற்றும் அல் ஹிலால் கழகங்கள் இணைந்த சவூதி றியாத் ஆல் ஸ்டார்ஸ் அணி (றியாத் சீசன் தெரிவு அண) அணியின் தலைவராக கிறிஸ்டியானோ ரொனால்டோ நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த மார்சிலோ கல்லார்டோ இவ்வணிக்கு பயிற்சியளிக்கிறார்.
அல்நாசர் கழகத்துக்காக விளையாடும் பிரேஸில் வீரர் லூயிஸ் கஸ்டாவோ, உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக கோல்களைப் புகுத்தி சவூதி அரேபியாவை வெற்றி பெறச் செய்த, அல் நாசர் கழக வீரர்களான சலேம் அல் தவ்சாரி, சலேஹ் அல் ஷெஹ்ரி ஆகியோரும் சவூதி ஆல் ஸ்டார்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு கோடி றியால்களுக்கு விற்பனையாகிய டிக்கெட்
இப்போட்டியை நேரில் பார்வையிடுவதற்கான விஐபி டிக்கெட் ஒன்று இணையத்தின் மூலம் ஏல விற்பனைக்கு விடப்பட்டது. இந்த டிக்கெட்டை சவூதி அரேபிய வர்த்தகர் ஒருவர் 10 மில்லின் றியால்களுக்கு (சுமார் 100 கோடி இலங்கை ரூபா, சுமார் 22 கோடி இந்திய ரூபா) வாங்கியள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளது.