வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக போதைப்பொருள் வியாபாரியை கைது செய்யுமாறு கோரி தனிநபர் ஒருவரால் இன்று (22) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஓட்டமாவடி, மீராவோடை பகுதியைச் சேர்ந்த சேகு இஸ்மாயில் முகம்மது நஸ்லி என்பவரே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகவும், அந்த வியாபாரி பல முறை கைதுசெய்யப்பட்டு விடுதலையானவர் என்றும் தெரிவிக்கிறார்.
தற்போது நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் பாவனைகளை கட்டுப்படுத்தி, இளைஞர்களை பாதுகாக்க வேண்டியே, தனிநபராக நின்று இந்த போராட்டத்தை நடத்துவதாக அவர் மேலும் தெரிவிக்கிறார்.
'மீராவோடை பிரதேசத்திலும் போதையை ஒழிக்க வியாபாரிகளை கைது செய்', 'எங்களது இளைஞர் சமூகத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்', 'அரசே! பொலிஸாரே! தயவுசெய்து அவசரமாக நடவடிக்கை எடுங்கள்' எனும் வாசகங்கள் அடங்கிய அட்டையினை ஏந்தியவாறு அந்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார், போராட்டத்தை மேற்கொள்ளும் நபரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளனர்.