ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஜனாதிபதிக்கும் தமிழ் தரப்புக்களுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக நேற்று(05.01.2023) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், முதல் கட்டமாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலமும், நிர்வாக ஏற்பாடுகளுக்கு ஊடாகவும் காலத்திற்கு காலம் இல்லாமல் செய்யப்பட்ட அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு மீள கையளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், காணி விடுவிப்பு மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை நல்லெண்ணத்தினை வெளிப்படுத்துவதற்கான முயற்சிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விவகாரங்களை தீர்ப்பதற்கான அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி மற்றும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர் என்ற வகையில்,
ஜனாதிபதியின் கலந்துரையாடல்களில் இரட்டை வகிபாகத்தினை கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை ஈடேற்ற முடியும் என்று சுமார் 35 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.