பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், முகத்துவாரம், மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிரஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில் வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.