தமிழ் தேசிய கூட்டமைப்பாக இல்லாமல் பிரிந்து தனித்து போட்டியிட வேண்டுமென தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி தீர்மானம் எட்டப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தனித்து போட்டியி்ட வேண்டுமென வலியுறுத்திய நிலையில், கூட்டமைப்பாக போட்டியிடுவதால் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்பளிக்க முடியாமல் போய்விடுமெனவும். இதனால் அவர்கள் கூட்டமைப்பின் மற்றைய கட்சிகளுக்கு சென்று அந்த கட்சிகள் பலமடைவதாகவும் மத்திய குழு உறுப்பினர்கள் பலர் தெரிவித்தனர்.
கடந்த தேர்தலில் மட்டக்களப்பில் அப்படி நடந்ததாகவும், தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்களையே ஏனைய கட்சிகள் களமிறக்கி அந்த வேட்பாளர்கள் தற்போது பங்காளிக்கட்சி உறுப்பினர்களாகி விட்டனர் எனவும் குறிப்பிட்டனர்.
இதனால் அடுத்த தேர்தலில் கூட்டமைப்பின் 3 கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு தேர்தலின் பின்னர் ஒன்றாக இணையலாம் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.
எனினும் கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவும், சட்டத்தரனி கே.வி.தவராசாவும் மாத்தரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒவ்வொருவருக்கும் தேர்தலில் ஆசனம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், சிந்திக்காமல் இனநல்லிணக்கத்தின் அடிப்படடையில் சிந்திக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
தனித்து போட்டியிட்டால் அதன்மூலம் பிளவு உருவாகி கூட்டமைப்பு சிதைந்து விடும் எனவும் சுட்டிக்காட்டினர்.
எனினும் இது பிரிந்து செயற்படுவதல்ல, தனித்தனியாக தேர்தலில் போட்டியிடுவது. அதற்கு பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் முதலில் உடன்பட்டனர். பின்னர்தான் கருத்தை மாற்றிக்கொண்டனர். என சுமந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து பங்காளிக்கட்சிகளுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படுமென தீர்மானிக்கப்பட்டது.