இம்முறை சுதந்திர தினத்தை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் சுதந்திரம் இதுவரை முறையாக கிடைக்காமை காரணமாகவே இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிஷ்கரிக்கப் போவதாகவும்,அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் ஜனநாயகம் என்ற போர்வையில் பெரும்பான்மைவாதம் வளர்ச்சியுற்று வருகிறது. அதனால் நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களின் சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. சிங்கள பௌத்த மக்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக நினைத்தனர். எனினும் தமக்கும் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என அவர்கள் இப்போது சிந்தித்தனர். அதனால் தான் இம்முறை நாட்டின் 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நாட்டில் எவருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை என நாம் தெரிவிக்க விரும்புகின்றோம். அதனால் இம்முறை சுதந்திர தினத்தை கருப்பு தினமாக பிரகடனப்படுத்தி நாட்டிற்கு முறையான சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாட்டை நாம் ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.