சவூதி அரேபியாவின், சவூதி சுப்பர் கிண்ண (சுப்பர் கப்) கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நாசர் கழக அணி, அரை இறுதியில் தோல்வியுற்று வெளியேறியுள்ளது.
றியாத் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் ரொனால்டோவின் அல் நாசர் கழகத்தை அல் இத்திஹாட் கழகம் 3:1 கோல்கள் விகிதத்தில் வென்றது.
இப்போட்டியில் ரொனால்டோ கோல் எதுவும் புகுத்தவில்லை. பல தடவைகள் அவர் கோல் புகுத்தும் நிலையை அண்மித்த போதிலும், அவரின் முயற்சிகளை அல் இத்தியாட் பின்கள வீரர்கள் முறியடித்தனர்.
அல் இத்திஹாட் சார்பில். ரோமாரின்ஹோ, அப்தேர்ரஸாக் ஹம்தெல்லா, மொஹன்னாத் அல் ஷன்கீதி ஆகியோர் கோல்களைப் புகுத்தினர்.
அல் நாசர் சார்பில், அண்டர்சன் டெலிஸ்கா மாத்திரம் கோல் புகுத்தினார்.
போர்த்துக்கல் வீரரான ரொனால்டோ, அல் நாசரில் இணைந்த பின்னர், பிரான்ஸின் பிஎஸ்ஜி கழகத்துடனான கண்காட்சி போட்டியில் பங்குபற்றினார். அப்போட்டியில் ரொனால்டோ 2 கோல்களை புகுத்திய போதிலும், மெஸி, எம்பாப்பே, நெய்மார் முதலானோரின் கோல்களால் பிஎஸ்ஜி கழகம் 5:4 கோல்களால் வென்றது.
கடந்த 22 ஆம் திகதி, சவூதி ப்ரோ லீக் தொடரில் அல் எத்திபாக் கழகத்துடனான போட்டி மூலம் அல் நாசரின் சார்பில் தனது முதல் உத்தியோபூர்வ போட்டியில் ரொனால்டோ அறிமுகமானார். அப்போட்டியில் 1:0 விகிதத்தில் அல் நாசர் கழகம் வென்றது. ஆனால், அப்போட்டியிலும் அல் நாசர் சார்பில் டெலிஸ்காவே கோல் புகுத்தினார். அதில் ரொனால்டோ கோல் புகுத்தவில்லை.
இந்நிலையில், ரொனால்டோ பங்குபற்றிய 2 ஆவது உத்தியோகபூர்வ போட்டியிலும் ரொனால்டோ கோல் புகுத்த முடியாமல் போயுள்ளதுடன், சவூதி சுப்பர் கப் தொடரிலிருந்தும் அல் நாசர் வெளியேறியுள்ளது.
இன்;று நடைபெறவுள்ள சுப்பர் கிண்ண இறுதிப்போட்டியில், அல் ஃபய்ஹா கழகத்தை அல் இத்திஹாட் கழகம் எதிர்கொள்ளவுள்ளது.
ரொனால்டோவின் அல் நாசர் கழகம் அடுத்ததாக, சவூதி ப்ரோ லீக் தொடரில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (03) அல் ஃபத்தேஹ் கழகத்துடன் மோதவுள்ளது.