பொரள்ளை கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள போதிலும், இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்து, இன்று அமைதியான போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
பொரள்ளை தேவாலயத்திற்கு முன்பாக, பாதிரியாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்தனர்.
ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுத்தலுக்கு பின்னர், இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பொரள்ளை தேவாலயத்திலிருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11ம் திகதி கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டு, ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட கொழும்பு பேராயர் இல்லத்தின் தொடர்பாடல் பிரிவில் பணிப்பாளர் அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த கருத்து தெரிவித்தார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை, பாராளுமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி இல்லாது செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவித்தார்.
”ஒரு வருடம் கடந்துள்ள போதிலும், உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை. இந்த தேவாலயத்தில் கடமையாற்றிய நால்வர் போலியாக கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்குட்படுத்தி, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதனை பயங்கரவாத குழுவொன்று செய்யவில்லை. சாதாரண நபர் ஒருவரே இதனை செய்திருந்தார். இந்த நபர் வேறொரு நபரின் ஆலோசனைக்கு அமைய, இந்த கைக்குண்டை அவர் வைத்துள்ளதாக அறியக்கிடைத்தது. இந்த சி.சி.டி.வி கமராவிலுள்ள நபர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?. அந்த நபர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதா? இந்த நாட்டை போலியாக இனியும் ஆட்சி செய்ய முடியாது என்பதை, 7 நீதிபதிகளினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் ஊடாக நாம் அவதானிக்கின்றோம்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை இல்லாது செய்வதற்கு பாராளுமன்ற அதிகாரம் பயன்படுத்தப்படவுள்ளதாக எமக்கு அறிய கிடைக்கின்றது. அவ்வாறு செய்ய முடியாது. அந்த தீர்ப்பு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அந்த தண்டனைக்கு மைத்திரிபால சிறிசேனவை உள்வாங்க வேண்டும்” என அருட் தந்தை ஜுட் கிரிஷாந்த தெரிவிக்கின்றார்.