'பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்' என இந்தியாவின் குஜராத் நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழக்குத் தீர்ப்பு ஒன்றின்போது கூறியுள்ளார்.
பசு கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் போது, இத்தகைய கருத்துகளை நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தானது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது.
டாப்பி மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதி சமீர் வினோசந்திரா வியாஸ் என்பவவே இவ்வாறு கூறியுள்ளார்.
பசு சாணத்தினால் உருவாக்கப்பட்ட வீடுகள் அணுக்கதிரியக்கத்தினாலும் பாதிக்கப்படுவதில்லை என விஞ்ஞானத்தினால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மாட்டின் சிறுநீர் பல நோய்களை குணப்படுத்துகிறது எனவும் அவர் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நீதிபதியின் இக்கருத்துகளுக்கான விஞ்ஞான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
2020 ஆம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் இருந்து 16 பசு மாடுகளை கடத்தி வந்ததாக கூறி மொஹம்மத் அமீன் என்பவரை குஜராத் பொலிஸார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, டாப்பி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், மொஹம்மத் அமீனுக்கு ஆயுள் தண்டனையும் 5 லட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இத்தீர்ப்பை நீதிபதி வினோத் சந்திரா வியாஸ் அறிவித்தபோது, 'இந்த உலகத்திற்கே பசு முக்கியமானது. பசு ஒரு மிருகம் மாத்திரமல்ல. அது ஒரு தாய். பசுவின் ரத்தம் பூமியில் சிந்தக்கூடாது. அவ்வாறு பசுவின் ரத்தம் பூமியில் என்றைக்கு சிந்தாமல் இருக்கிறதோ, அன்றுதான் இந்த உலகம் செழிப்பாக இருக்கும். உலகில் உள்ள வேறு எந்த ஜீவராசியும் பசுவை போன்று நன்றியுணர்வு கொண்டது இல்லை. எனவே, அத்தகைய நன்றியுணர்வு கொண்ட பசுக்களுக்கு நாம் மிகவும் மதிப்பளிக்க வேண்டும்.
பெரும்பாலான மக்கள் பசுவை ஒரு மதம் சார்ந்த விஷயமாகவே பார்க்கின்றனர். அது தவறு. பொருளாதார ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பசுக்கள் பலன் கொடுக்க கூடியவை ஆகும். உதாரணமாக, ஒருவர் பசுவை துன்புறுத்தினால் அவரது சொத்துகள் அனைத்தும் அழிந்துபோகும். மொத்தத்தில், இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பசுக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்' எனவும் கூறியுள்ளார்.