Our Feeds


Wednesday, January 11, 2023

Anonymous

நாட்டின் ஜனாதிபதியைத் தான் சந்தித்தோம் - ஐ.தே.க தலைவரை சந்திக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

 



(இராஜதுரை ஹஷான்)


தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்க முடியாது. அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்.

மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் 340 உள்ளூராட்சி மன்றங்களும் ஸ்தாபிக்கப்படும். 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை சந்திக்கவில்லை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தோம். ஆணைக்குழுவின் செயல்பாடுகளில் ஜனாதிபதி எவ்விதத்திலும் தலையிடவில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செயல்படுகிறது.

நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்றிருக்க வேண்டும்.இருப்பினும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வரை பிற்போட்டார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அறிவிப்பு கடந்த 4 ஆம் திகதி அறிவித்தோம். எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி 340 உள்ளூர் அதிகார சபைகளையும் ஸ்தாபிக்க வேண்டுமாயின் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தற்போதைய செயற்பாடுகளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியும் என எதிர்பார்த்துள்ளோம்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக முறையில் அரசியலமைப்புக்கு அமைய செயற்படுகிறது.தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளுக்கு அமைய செயல்பட முடியாது.அரசியலமைப்புக்கு அமையவே ஆணைக்குழு செயல்பட வேண்டும்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எடுத்த தீர்மானங்கள் அனைத்தும் முழு இணக்கப்பாட்டுக்குட்பட்டதாக காணப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தலைவரின் அழைப்பை ஏற்று நாங்;கள் செல்லவில்லை.நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி விடுத்த அழைப்பிற்கு மதிப்பளித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.இதனால் ஆணைக்குழுவின் சுயாதீனத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »