உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவுகளை மட்டுப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் செலவு ஒழுங்குமுறை சட்டமூலம், சபாநாயகர் சான்றிதழை பதிவு செய்ததன் பின்னர் அமுலுக்கு வரும் என்பதால் அந்த சட்டமூலத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும் எனவும் கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளர் சார்பாக அதிகபட்சமாக செலவிடும் தொகை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் சார்பாக 15 முதல் 20 ரூபா வரை மட்டுமே செலவு செய்வது பொருத்தமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கட்சி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை வழங்கிய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் ஆணைக்குழுவின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.