(நா.தனுஜா)
வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் சர்வதேச சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொலிஸாரின் கடமைக்கு இளையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட வேலன் சுவாமிகள், அன்றைய தினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமை குறித்து கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ள உள்ளக மற்றும் சர்வதேச சிவில் சமூக மற்றும் அரசியல் பிரதிநிதிகள், தமிழ்க்கட்சிகளின் அரசியல் தலைவர்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மையைத் தோற்றுவிக்கும் என்றும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
சியோபைன் மெக்டொனாக்
'அண்மையில் ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காக சிவில் சமூக செயற்பாட்டாளரும் இந்து மதத்தலைவருமான வேலன் சுவாமிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றேன். அமைதியான முறையில் போராடுவதென்பது ஓர் அடிப்படை மனித உரிமையாகும்' என்று பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டொனாக் தெரிவித்துள்ளார்.
கனேடிய தமிழர் தேசிய பேரவை
'அமைதிப்போராட்டத்தில் பங்கேற்றமைக்காக வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம். இதற்கு எதிராக சர்வதேச சமூகம் குரலெழுப்பவேண்டுமென வலியுறுத்துகின்றேன். அவ்வாறு குரலெழுப்பாவிட்டால் மேலும் பலர் கைதுசெய்யப்படுவர்' என்று கனடாவைத் தளமாகக்கொண்டியங்கும் கனேடிய தமிழர் தேசிய பேரவை எச்சரித்துள்ளது.
இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு
வேலன் சுவாமிகளின் கைது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு (பேர்ள்), 'அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கான வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமை குறித்து மிகுந்த கரிசனையடைகின்றோம். அரச அடக்குமுறையை எதிர்க்கும் தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாக பொலிஸாரின் அத்துமீறல்களுக்கு உள்ளாவதுடன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்படுவர் என்ற அச்சுறுத்தலுக்கும் உள்ளாகின்றனர்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க தமிழர் செயற்பாட்டு இயக்கம்
'இலங்கைப் பொலிஸாரால் தமிழ் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை அமெரிக்கத்தமிழர்களாகிய நாம் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தில் நல்லிணக்கம் எதிர்மறையான பாதையில் செல்கின்றதா?' என்று அமெரிக்காவைத் தளமாகக்கொண்டியங்கும் அமெரிக்க தமிழர் செயற்பாட்டு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்
'அமைதிப்போராட்டத்தில் கலந்துகொண்டமைக்காகவும், தனது சர்வதேச ஜனநாயக உரிமையை செயற்படுத்தியமைக்காகவும் வேலன் சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையானது, இலங்கையில் நிலவும் பிரச்சினைக்கு ஆணிவேராக அமைந்துள்ள விடயத்திற்குத் தீர்வுகாண்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெருமளவிற்கு நாட்டம் காண்பிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.
கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரத்தை முடக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடு அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின்மையையே தோற்றுவிக்கும்' என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
'வேலன் சுவாமிகளின் சட்டவிரோதக் கைது நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, அதனை ஓர் பாசிஸ நடவடிக்கையாகவே கருதுகின்றோம்.
இது ஜனநாயகம், சுதந்திரம், கருத்துவெளிப்பாட்டுச்சுதந்திரம் ஆகிய சொற்பதங்களை மீளவும் கேள்விக்குட்படுத்தும் வகையிலானதோர் நடவடிக்கையாகும்.
75 வருடகாலத்தோல்விக்குப் பின்னரும்கூட எந்தவொரு பாடமும் கற்றுக்கொள்ளப்படவில்லை' என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டுள்ளார்.