Our Feeds


Monday, January 23, 2023

ShortNews Admin

முஸ்லிம்களுக்கு எதிரானவர்களுடன் இணைந்துள்ள சு.க வில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது - பைசர் முஸ்தபா!



(எம்.ஆர்.எம்.வசீம்)


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவம் அண்மைக்காலத்தில் எடுத்துவந்த தீர்மானங்கள் எனது அரசியல் கொள்கைக்கு முரணானவை. 

முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான குழுவினருடன் இணைந்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்தும் இருக்க முடியாது.

அதனால் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிக்கொண்டேன் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகுவதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு, இனவாதத்துக்கு எதிரான கொள்கையுடைய கட்சியாகவே ஆரம்பம் முதல் இருந்துவந்தது.

என்றாலும், அண்மைக்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் தொடர்ந்து நிலையான தீர்மானம் எடுக்க தவறி வருவதால்,  பலரும் கட்சியில் இருந்து விலகிச்செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது. 

அதன் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மேற்கொண்டுள்ள சில தீர்மானம் எனது கொள்கைக்கு முரணானது. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதால் கட்சி உறுப்புரிமையை இராஜினாமா செய்ய தீர்மானித்து, கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து நீங்கிக்கொண்டேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சட்ட உதவிளை நானே மேற்கொண்டுவந்தேன். அந்த நடவடிக்கையை அவர் விரும்பினால், தொடர்ந்து முன்னெடுப்பேன். கட்சியில் இருந்து விலகினாலும், தனிப்பட்ட ரீதியில் யாருடனும் பகையாக இல்லை. 

எனது பதவி விலகல் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றன. குறிப்பாக, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் எந்த உண்மையும் இல்லை. எந்த கட்சியிலும் இணையும் எண்ணம் எனக்கில்லை. என்றாலும், எனது அரசியல் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னுக்கு கொண்டு செல்வேன்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தற்போதைய கொள்கை எனது கொள்கைக்கு முரணானது. முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருபவர்களுடன் எனக்கு இருக்க முடியாது. 

இதனால் முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுக்கொள்வது கடினமாகும். முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக செயற்பட்டவர்களுடன் இணைந்து செயற்படுவதை என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் மீண்டும் இணைந்துகொள்ளப்போவதில்லை. கட்சியை விட எனது சமூகத்தின் கெளரவம் மேலானது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »