ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதல்களுக்கு உள்ளான பிரேஸில் பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் மீண்டும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவின் ஆதரவாளர்கள், பாராளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்தினர். ஜனாதிபதி மாளிகையையும் அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ தோல்வியுற்றார். முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா வெற்றி பெற்றார். கடந்த முதலாம் திகதி அவர் ஜனாதிபதியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தலைநகர் பிரசிலியாவிலுள்ள பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் உச்சநீதிமன்றத்தை ஞாயிற்றுக்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி திங்கட்கிழமை) முற்றுகையிட்டனர்.
கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், 2021 ஜனவரி 6 ஆம் திகதி அமெரிக்க பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்துதும் விதமாக இசம்சம்பவம் இருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இத்தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள, பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனராவும் வன்முறையான ஆர்ப்பாட்டங்களை கண்டிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை) பாராளுமன்றம், ஜனாதிபதி மாளிகை மற்றும் உச்சநீதிமன்றத்தை பிரேஸில் பாதுகாப்புப் படையினர் மீளவும் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளனர்.