(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மனங்களில் தனி இடமுண்டு. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை திங்கட்கிழமை (9) கொழும்பு மாவட்ட பிரதேச செயலக காரியாலயத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
பொதுஜன பெரமுனவின் பொருளாதார கொள்கையை நாட்டு மக்கள் புறக்கணிக்கவில்லை. மக்கள் மனங்களில் பொதுஜன பெரமுன தனியிடம் பிடித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அமோக வெற்றி பெறுவோம். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக கலந்துகொண்டுள்ளார்.
அறிவார்ந்த மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள். தேர்தலை கண்டு அஞ்சவேண்டிய தேவை எமக்கு கிடையாது.
கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் - ரஷ்யா யுத்தம் ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.
தேர்தல் நடவடிக்கைகள் இவ்வாரம் முதல் மும்முரமாக முன்னெடுக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்றார்.