(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவிற்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் கிடையாது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
பிரதிசபாநாயகர் தலைமையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்றம் கூடிய போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ தேர்தல் திருத்த முறைமை தொடர்பான தனிப்பட்ட பிரேரணை தொடர்பில் கலக்கமடைய வேண்டிய தேவை கிடையாது. பாராளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதை நிறைவேற்றுவதற்கு குறைந்தது ஆறு மாத காலமேனும் செல்லும்.
தனிப்பட்ட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்படும் போது அது தொடர்பில் அமைச்சரவை ஆலோசனை குழுவில் ஆராயப்படும். குறித்த சட்டமூலத்தை எவரேனும் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த 14 நாட்கள் காலவகாசம் வழங்கப்படும். சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் மூன்று வார காலத்திற்குள் வியாக்கியானத்தை அறிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட பிரேரணை ஒன்று சட்டமாகுவதற்கு குறைந்தது இரண்டரை மாதங்களேனும் செல்லும். ஆகவே 25 சதவீத இளைஞர் பிரதிநிதித்துவ சட்டமூலம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு தாக்கல் செலுத்தாது என்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.
தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியலமைப்பினால் உரித்தாக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பில் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கும், அரசாங்கத்திற்கும் கிடையாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றார்.