(எம்.மனோசித்ரா)
உள்ளூராட்சிடமன்றத் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் கலந்துரையாடலில் அதன் உறுப்பினர்கள் மூவருமே கலந்துகொள்ளாமையினால் , இதன் போது எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் பாரிய சிக்கலான நிலைமை தோற்றம் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்தார்.
தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கும் கலந்துரையாடலில் குறைந்த பட்ச உறுப்பினர்கள் கூட கலந்து கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த சனிக்கிழமை (21) நிறைவடைந்த நிலையில் , அன்றைய தினம் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிப்பதற்கான கலந்துரையாடலுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மற்றொரு உறுப்பினர் தவிர்ந்த வேறு எவரும் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
கலந்துரையாடலில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட போதிலும் , அவ்வாறு தீர்மானம் எடுப்பதற்கான வாய்ப்பு ஆணைக்குழுவிற்கு இல்லை என்று அந்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தினத்தை அறிவித்த ஆணைக்குழுவின் கூட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.