Our Feeds


Sunday, January 15, 2023

SHAHNI RAMEES

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தப்படாது - பரீட்சை திணைக்களம்

 

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகள்  திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மின்சார சபை உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. அதற்காக 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் தோற்றவுள்ளனர். மேலும்

நாடளாவிய ரீதியில் 2,200 பரீட்சை நிலையங்களில் பரீட்சையை நடாத்துவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் மாணவர்களின் நலன்கருதி அவர்கள் பரீட்சை வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கும் வேறு சிக்கல்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கும்  மின்வெட்டை அமுல்படுத்தாது இருப்பதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மின்சார சபை உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தனர். எனவே பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளின் போது உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »