மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரம் சட்டவிரோதமானது.அமைச்சரவை அங்கீகாரம் வழங்கினாலும்,ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க போவதில்லை.மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது கிடையாது.என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
தடையின்றி மின்சாரத்தை வழங்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடும் கருத்து பொய்யானது.
மின்கட்டணத்தை அதிகரித்தாலும்,அதிகரிக்காவிட்டாலும் மின்விநியோக துண்டிப்பை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டும் இதுவே உண்மை.
மக்களிடம் உண்மையை குறிப்பிட்டால்,நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.
மின்கட்டணத்தை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்பாவனையாளர் சங்கத்தினர் திங்கட்கிழமை (09) பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதன்போது கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தவறான தகவல்களை கொண்டு மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சாரத் துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை இலங்கை மின்சார சபைக்கு பலமுறை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளோம்.
ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு முரணாக அமைச்சரவையில் கடந்த 2 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை சட்ட விரோதமானது.
மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என நாட்டு மக்கள் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்கள்.90 மின்னலகுக்கு குறைவான மின்சாரத்தை பாவிக்கும் 74 இலட்ச மின்பாவனையாளர்களிடமிருந்து 100 பில்லியன் ரூபாவை மறைமுகமாக அறவிடும் வகையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
180 முதல் 300 வரையான மின்னலகுகளை பாவிக்கும் மின்பாவனையாளர்களின் மின்கட்டணத்தை அதிகரிக்க குறித்த அமைச்சரவை பத்திரத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை.
நடுத்தர மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின்கட்டணத்தை அதிகரித்தால் மின்பாவனைக்கான கேள்வி முழுமையாக இல்லாமல் போகும்,அது சமூக கட்டமைப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இலங்கை மின்சார சபை நட்டமடைகிறது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மின்கட்டணம் அதிகரித்ததன் பின்னர் இலங்கை மின்சார சபை இலாபமடைந்துள்ளது.
இந்த ஆண்டு தடையில்லாமல் மின்சாரத்தை வழங்க வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் முன்வைக்கும் கருத்து முறையற்றது.
மின்கட்டணத்தை அதிகரித்தாலும்,அதிகரிக்காவிட்டாலும் எதிர்வரும் காலங்களுக்கு நாளாந்தம் மின்விநியோக தடையை அமுல்படுத்த வேண்டும்,இதுவே உண்மை மக்களிடம் உண்மையை குறிப்பிட்டால் நெருக்கடியான சூழ்நிலையில் மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
ஆகவே மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கினாலும்,அந்த தீர்மானத்தை செயற்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்க போவதில்லை என்றார்.