Our Feeds


Tuesday, January 17, 2023

ShortNews Admin

நடந்தது என்ன ? கொழும்பில் பல்கலை மாணவி காதலனால் கழுத்தறுத்துக் கொலை : தப்பியோடிய காதலன் தற்கொலை செய்துகொள்ளும் முன் கைது



(எம்.எப்.எம்.பஸீர்)


கொழும்பு பல்கலைக்கழகத்தின், விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவர், கொழும்பு - 7, குதிரைப் பந்தய திடலின் அருகே கழுத்தறுத்து, இன்று (17) நண்பகல் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம - கிரிவந்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான  சத்துரி ஹன்சிகா மல்லிகாரச்சி எனும் யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குதிரைப் பந்தய திடலின் பின் பக்கமாக, கால்பந்தாட்ட சம்மேள கட்டிடத்தை நோக்கியதாக உள்ள பகுதியில் வைத்து  யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் கூறினர்.

சடலத்தின் அருகே கையடக்கத் தொலைபேசி ஒன்றும்  பை ஒன்றும் காணப்பட்ட நிலையில்  சம்பவம் குறித்து கருவாத்தோட்டம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந் நிலையில் இன்று (17) மாலையாகும் போது, குறித்த யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும், கொழும்பு பல்கலைக் கழகத்தின் கலை பீட மாணவனான வெல்லம்பிட்டி - கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த மாணவனை கறுவாத்தோட்டம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலையை அடுத்து, அப்பகுதியில் உள்ள சி.சி.ரி.வி. உள்ளிட்ட அறிவியல் தடயங்களை வைத்து முன்னெடுத்த விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் கூறினர்.

சி.சி.ரி.வி. காணொளி பரிசோதனையின் போது சந்தேக நபர் கொழும்பு பல்கலைக் கழக மாணவன் என்பதை பல்கலைக் கழககத்தின் மற்றொரு மாணவன்  அடையாளம் காட்டியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட இரு பொலிஸ் குழுக்கள், அம்மாணவனை தேடி அவரது வீடு அமைந்துள்ள கொலன்னாவை பகுதிக்கும், கொழும்பு பல்கலைக் கழகத்தில் அம்மாணவன் தங்கியிருந்த பகுதிக்கும் சென்றுள்ளன.

இதன்போது பல்கலைக் கழகத்திலிருந்து, குறித்த சந்தேக நபரான மாணவன் எழுதியதாக நம்பப்படும் சில கடிதங்களும், மானசீக நோய்களுக்கு வழங்கப்படும் சில மருந்துகளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

இதனைவிட,   வீட்டுக்கு சென்ற பொலிசாருக்கு, அங்கு சந்தேக நபர்  சிக்காத போதும், கொலை செய்யும் போது அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடைகள், கொலைக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் இரத்தம் தோய்ந்த கத்தி,  அவரது கையடக்கத் தொலைபேசி, பணப் பை என்பன கிடைத்துள்ளன.

இந்நிலையில் அப்பொருட்களை வீட்டில் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் நோக்கோடு வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக கூறப்படும் சந்தேக நபரை பொலிசார் இடை நடுவே கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

சந்தேக நபரும், கொலையுண்ட யுவதியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் காதல் தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

எனினும் இன்று மாலையாகும் போதும் கொலைக்கான அண்மைய பிரதான காரணி குறித்து வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கொலையுண்ட யுவதி குதிரைப் பந்தய திடல் அருகே, காதலனுடன் பேசுவதற்காக வந்துள்ள போது  இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிசார் முன்னெடுக்கின்றனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »