(இராஜதுரை ஹஷான்)
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஏதேனும் காரணிகளினால் பதவி விலகினால், அந்த பதவி விலகல் தேர்தல் நடவடிக்கைகளுக்கும், ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கும் எவ்விதத்திலும் தாக்கம் செலுத்தாது ஆணைக்குழு இயல்பாக செயற்பட முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமான மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகும் பட்சத்தில் ஏற்படும் வெற்றிடம் குறித்து அரசியலமைப்பின் 104 ஆவது உறுப்புரையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய அரசியலமைப்பின் 104(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் ஆணைக்குழுவின் கூட்ட நடப்பெண் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கியதாக காணப்படலாம். 104 (2) (அ) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டும். தலைவர் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்ளாவிடின் கூட்டத்திற்கு சமூகமளித்த உறுப்பினர்களில் ஒருவர் கூட்டத்திற்கு தலைமை தாங்க வேண்டும்.
2(ஆ) உறுப்புரையின் பிரகாரம் ஆணைக்குழுவின் தீர்மானம், அந்த தீர்மானம் எடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்துக் கொண்டு பெரும்பான்மை ஆதரவு வழங்க வேண்டும். ஒரு வேளை ஒரு தீர்மானத்திற்கு சமமான வாக்குகள் வழங்கப்பட்டால் ஆணைக்குழுவின் தலைவர் தீர்மானித்து வாக்களிக்க வேண்டும்.
104(3) ஆம் உப பிரிவுக்கு அமைய ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் ஏதேனும் வெற்றிடம் ஏற்பட்டால் அதனை கருத்திற் கொள்ளாமல் செயற்பட ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உண்டு,ஆணைக்குழுவின் உறுப்பாண்மையில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்ற காரணத்தினால் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் வலுவற்றது என கருத முடியாது.ஆகவே ஆணைக்குழு இயல்பாக செயற்பட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.சாள்ர்ஸ் ஆணைக்குழு பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு நேற்று (ஜன 25) இரவு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.