Our Feeds


Wednesday, January 11, 2023

Anonymous

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழா - ஜனாதிபதி ரனில் பங்கேற்பு - தென் ஆபிரிக்க உலமா சபை தலைவர் சிறப்புரை

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி உலமா சபைத் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக பலந்து கொள்வதோடு கௌரவ அதிதியாக பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்கிறார். 

உலமாக்கள் அப்பணிகளை கட்டுக்கோப்புடன் மேற்கொள்வதற்கு காலியில் அமைந்துள்ள பஹ்ஜத்துல் இப்றாஹிமிய்யா அரபுக் கல்லூரியில் 1924 ஆம் ஆண்டு மார்க்க அறிஞர்களால் உருவாக்கப்பட்ட உலமா சபை, 2000 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. தற்போது ஜம்இய்யா 24 மாவட்டங்களில் 163 கிளைகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பில்  8300 க்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் போதனைகளின் அடிப்படையில் வாழுகின்ற, தீனின் மேம்பாட்டிற்கும் சமூகத்தினதும் தேசத்தினதும் வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்கின்ற ஒரு கட்டுக்கோப்பான முன்மாதிரி முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் செயற்பட்டு வரும் உலமா சபையின் மாநாட்டை சிறப்பாக நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நூற்றாண்டு விழா நிகழ்வில்  அப்துல் ஹாலிக் மௌலவி வரவேற்புரை நிகழ்த்த இருப்பதோடு உலமா சபையின்  எதிர்கால திட்டங்கள் பற்றி உலமா சபை பொதுச் செயலாளர் அர்கம் நுராமித் மௌலவி உரையாற்ற இருப்பதோடு  உலமா சபையின் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் உரையும் இடம்பெற உள்ளது.  

ஜனாதிபதி மற்றும்  பிரதமர் ஆகியோரும் உரையாற்ற உள்ள அதே வேளை தென் ஆபிரிக்கா உலமா சபை தலைவர் மௌலானா இப்ராஹீம் பாம் சிறப்புரையாற்றுவார்.

நூற்றாண்டை முன்னிட்டு விசேட முத்திரை வெளியிடப்பட இருப்பதோடு முதல் முத்திரையை ஜனாதிபதி வெளியிட்டு வைப்பார். அதனைத் தொடர்ந்து உலமா சபை  உப தலைவர் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத்  தலைமையில் நூற்றாண்டு மலர் வெளியீட்டு வைக்கப்படும். அடுத்து பிரகடனம் வெளியிடப்படும். கலாநிதி முபாரக் மதனி தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற இருப்பதோடு அஷ்ஷெய்க் கலாநிதி அஸ்வர் நன்றியுரையாற்றுவார். 

இந்த விழாவில் டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் கொழும்பு ஸாஹிரா கல்லுரி மாணவர்கள் தேசிய கீதம் இசைப்பர். தன்வீர் அகடமி மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லுரி  மாணவர்களின் கஸீதாவும் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »