கால்பந்தாட்ட ஜாம்பவான்களான லயனல் மெஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அடுத்தவாரம் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் மோதவுள்ளனர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகம், அல் நாசரின் பிரதான சவூதி போட்டியாளரான அல் ஹிலால் கழகமும் கூட்டாக இணைந்து லயனல் மெஸி அங்கம் வகிக்கும் பிரெஞ்சு கழகமான பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்துடன் சினேகபூர்வ போட்டியொன்றில் மோதவுள்ளது.
சவூதி அரேபியவின் தலைநகர் றியாத்தில் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இப்போட்டி நடைபெறவுள்ளது.
உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி, பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்தில் விளையாடுகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் அண்மையில் இணைந்தார். அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோ ஊதியம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
அல் நாசர் கழகத்தின் சார்பில் ரொனால்டோ இன்னும் விளையாடவில்லை.
இந்நிலையில், சவூதி அரேபியாவின் முன்னிலைக் கழகங்களான அல் நாசர் மற்றும் அல் ஹிலால் கழக வீரர்கள் ஒன்றிணைந்து பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்துடன் சிநேகபூர்வ போட்டியில் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.