(எம்.வை.எம்.சியாம்)
கடந்த காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின் போதே நாட்டிற்குள் அதிக போதைப்பொருள் பாவணை வந்தது. அதன் பின்னர் அதன் பாவனை சடுதியாக உயர்ந்தது.
மேலும் பொலிஸார் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த சில திட்டமிட்ட குழு சதியில் ஈடுபட்டுள்ளதாகவும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தக் குழு இந்த சதியில் ஈடுபட்டு வருவதாகவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுடன் கம்பஹா மாவட்ட செயலகத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் சட்டம் ஒழுங்கை தவறாக பயன்படுத்துவதற்கும் பொலிஸார் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதற்கும் சிலர் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயல்பட்டு வருகின்றனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி இந்த சதியில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக பொலிஸாருக்கு எதிராக பேஸ்புக்கில் பதிவிடவும் கருத்து தெரிவிக்கவும் இந்த சதிகாரர்கள் பணம் கொடுக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் கிளைமாக்ஸ் கடந்த வருடம் மே 9 ஆம் திகதி இடம்பெற்றது.
அன்றைய தினம் போதைப்பொருள் வர்த்தகர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளையும் தாக்கினர்கள். அதன்பின்னர் போதைக்கு அடிமையானவர்களும் பாதாள குழுக்கள் செயற்பாடுகளும் போராட்டக் காலத்திலேயே உருவாகியது. இந்த காலக்கட்டத்திலேயே போதைப் பொருட்கள் நம் நாட்டிற்கு அதிகம் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதை ஆரம்பத்திலேயே கூறினோம். ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கு சில பொலிஸ் அதிகாரிகளும் உதவுகிறார்கள். கடந்த மே மாதம் 9ஆம் திகதி வரை மினுவாங்கொடை காவல்துறையின் முன்னாள் நிலையத் தளபதி போராட்டத்துடன் இருந்தார்.
அதுபோல சில காவல் நிலைய தளபதிகளும் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள்.அதுபோல சில காவல் நிலைய தளபதிகளும் போராட்டத்துடன் தொடர்புடையவர்கள்.
அதனால்தான் போராட்டக்காரர்கள் பலமடைந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் பொலிஸாரை தாக்கியதில் மக்கள் உண்மை நிலையை உணர்ந்தனர். பொலிஸ் பிரிவு பலமாக இருந்தால் இப்படி நடந்து இருக்காது.
முன்பு போல் இல்லாமல் சமூக ஊடகங்கள் நாட்டின் சித்தாந்தத்தை நொடிகளில் மாற்றிவிடும். எனவே பொலிஸார் செய்யும் நல்ல பணியை சமூக வலைதளங்கள் மூலம் சொல்லும் திட்டத்தை செயல்படுத்துங்கள்.
இல்லை என்றால் பொலிஸாருக்கு எதிராக இன்னொரு அலை உருவாகும். தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பொலிஸாருக்கு உரிய மரியாதையை வழங்கியது. இதன் காரணமாக தற்போது பொலிஸ் பிரிவு புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றார்.