(இராஜதுரை ஹஷான்)
தவறான ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க செயற்பட்டால் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே அவருக்கும் ஏற்படும்.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முழுமையாக அழிக்கும் வகையில் அரசாங்கத்தின் செயல்பாடுகள் காணப்படுகிறது என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாரஹேன்பிடியவில் உள்ள அபயராம விகாரையில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
முறைமை மாற்றத்தின் ஊடாக அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நடவடிக்கைகளை கொண்டார்.
இருப்பினும் அவரை சூழ்ந்திருந்த தரப்பினர் அவரை தவறாக வழிநடத்தி முழு நாட்டுக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தினார்கள்.
நாடு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை எதிர்கொண்ட போது எவரும் அரசாங்கத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து சவால்களையும் பொறுப்பேற்றார்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
தவறான ஆலோசனைகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டால் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு நேர்ந்த கதியே அவருக்கும் நேரிடும் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
அரசாங்கத்தின் ஒருசில தீர்மானங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முழுமையாக அழிக்கும் வகையில் காணப்படுகிறது.
நெருக்கடியான சூழ்நிலையில் அரச செலவுகளை குறைத்து மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அரசாங்கம் செயல்பட வேண்டும்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 38 இராஜாங்க அமைச்சுக்கள் அவசியமற்றது,ஆகவே மக்களுக்கான நலன்புரி சேவைகளை மட்டப்படுத்த முன்னர் வீண் செலவுகளை அரசாங்கம் முதலில் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.