Our Feeds


Saturday, January 21, 2023

ShortNews Admin

யாழ். மாநகர சபைக்கு புதிய மேயர் நியமிப்பு - நள்ளிரவில் வெளியான விசேட வர்த்தமானி!



யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.


இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று நள்ளிரவு வெளியாகியது.

யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததனால் வெற்றிடமாக இருந்த முதல்வர் பதவிக்கு உறுப்பினர்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் கடந்த வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது 24 உறுப்பினர்கள் கூட்ட மண்டபத்தில் கூடியிருந்தனர். கூட்டத்துக்குத் தேவையான நிறைவெண் இருப்பதனால் கூட்டத்தைத் தொடர்ந்து நடாத்துவதாக உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் அறிவித்ததோடு, முதல்வருக்கான முன்மொழிவுகளைக் கோரினார்.

தமிழரசுக் கட்சியின் சார்பில் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட்டின் பெயர் முன்மொழியப்பட்டது. இதனை அடுத்து முன்மொழிவை ஆட்சேபிப்பதாகத் தெரிவித்து ஈ.பி.டி.பி ஐச் சேர்ந்த எம். ரெமீடியஸ் சபையையில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் சபையை விட்டு வெளியேறினர்.

இதனால் தெரிவைக் கொண்டு நடாத்துவதற்குத் தேவையான கோரம் இல்லாத காரணத்தனால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தெரிவுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு நியாயமற்றது என கூட்டத்தில் கலந்து கொண்ட 20 உறுப்பினர்கள் தமது எழுத்து மூல ஆட்சேபனையை உள்ளூராட்சி ஆணையாளருக்கு அனுப்பி வைத்திருந்தனர். இது தொடர்பில் ஆளுநர் தலைமையில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர்களில் ஒருவரும் கூடி ஆராய்ந்ததாகவும், அதன் பின் யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இ. ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளதாகவும் ஆளுநர் செயலக வட்டாரங்களில் இருந்து அறிய முடிந்தது.

2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமை அன்று நடாத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்படுவதற்கான விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »