கொழும்பு இளைஞர்கள் தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் ஊடாக, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இளைஞர்கள் கூட்டணியின் ஊடாக, இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தேசிய ஜனநாயக முன்னணி சார்பில் கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் பிரதம வேட்பாளர் மேகநாதன் வினிக்ஸன், தெரிவித்தார்.
முழுமையாக இளைஞர்களின் கூட்டணியின் ஊடாக, மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாம் தயாராகி வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
”நான் ஒரு தமிழன். எனினும், இன, மத வேறுபாடுகளை கடந்து, ஒன்றிணைந்த இலங்கையர் சமூகத்தை உருவாக்கும் கொள்கை கொண்ட தேசிய ஜனநாயக முன்னணி கட்சியின் ஊடாக, இம்முறை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த நாட்டை அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.
வேட்பாளர் தெரிவு தற்போது இடம்பெற்று வருகின்றது. கொழும்பில் போட்டியிட விரும்பும், தகுதியாக இளைஞர்கள் இருந்தால், எம்முடன் கைக்கோர்க்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இந்த தேர்தலில் வெற்றியீட்டி, நாட்டையும், சமூகத்தையும் இன, மத வேறுபாடின்றி முன்னோக்கி கொண்டு செல்லும் ஒரு புதிய பாதையை அமைப்போம். ஒன்றிணைவோம் என அழைப்பு விடுக்கின்றேன்.” என கொழும்பு மாநகர சபையில் போட்டியிடும் பிரதம வேட்பாளர் மேகநாதன் வினிக்ஸன் தெரிவிக்கின்றார்.