ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்டவர்கள் பொறுப்புக் கூற வேண்டும் என உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு கிருஸ்தவ உறவுகளுக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும். என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹிதாயத் சத்தார் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிமினால் நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் 12 தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை கடந்த 12ம் திகதி வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது.
குறித்த தீர்ப்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சிசிர மென்டிஸ் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள் என்று தீர்ப்பு வழங்கியுள்ள உயர் நீதிமன்றம் இவர்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையையும் அறிவித்துள்ளது.
தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்தினரின் வலியை எவறாலும் உணர முடியாது. பிரிந்த உயிர்களை திருப்பிக் கொடுக்க முடியாது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த நீதியின் ஒரு அங்கம் தான் இந்தத் தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் நீதி மன்றம் பெயர் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட நபர்களின் பொறுப்பற்ற செயல்களினால் 300 க்கும் அதிகமான அப்பாவி கிருஸ்தவ உயிர்களை நாம் இழந்து விட்டோம். 500 க்கும் அதிகமான மக்கள் உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலை இனிமேல் ஒருபோதும் இந்நாட்டில் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.
உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து 10 கோடி ரூபாய்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டதுடன், குறித்த தற்கொலை தாக்குதலை இவர்கள் தடுக்கத் தவறினார்கள் என்பதையும் உச்ச நீதிமன்றம் அடித்துச் சொல்லியிருக்கிறது.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும்.
இந்தத் தீர்ப்பை பேராயர் கர்த்தினால் மல்கம் ரஞ்சித் அவர்கள் கிருத்தவ மக்கள் சார்பில் வரவேற்றுள்ளார். முஸ்லிம்களாகிய நாமும் இந்தத் தீர்ப்பை தலைமேல் வைத்து வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம். காரணம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி உள்ளிட்டோரின் இந்த பொடுபோக்குத் தனத்தினால் கிருஸ்தவ உறவுகள் பாதிக்கப்பட்டதை போலவே இன்றுவரை இஸ்லாமியர்களாகிய நாமும் பாதிக்கப்பட்டு வருகிறோம். பல அப்பாவிகள் வருடக் கணக்கில் அநியாயமாக சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
இதற்கெல்லாம் கிடைத்த ஒரு நீதியாகவே இந்தத் தீர்ப்பை முஸ்லிம்களாகிய நாமும் நோக்குகிறோம். நீதி என்றைக்கும் வெல்லும் என்பது இன்று நிரூபணமாகியுள்ளது.
இவன்,
ஹிதாயத் சத்தார்,
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்,
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட அமைப்பாளர்.