Our Feeds


Sunday, January 15, 2023

Anonymous

மீண்டுமொரு த.தே.கூ உதயம் ? தமிழர்கள் பலம்பெறுவதற்கு ஒன்றிணையுமாறு மாவை, விக்கி, கஜேந்திரகுமாருக்கும் பகிரங்க அழைப்பு!

 



(ஆர்.ராம்)


தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய ஐந்து அரசியல் கட்சிகளும் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற பெயரில் புதிய கூட்டமைப்பொன்றை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன. 

அத்துடன், இந்தக் கூட்டமைப்பானது தேர்தலுக்கு மட்டுமானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அக்கட்சிகளின் தலைவர்கள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் விடுதலைப்பயணித்தினை முன்னெடுப்பதற்கான கூட்டு என்று கூட்டிக்காட்டியுள்ளனர். 

மேலும், தமிழ் மக்கள் பலம்பெறுவதற்காக தமது கூட்டில் ஒன்றிணையுமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு பகிரங்க அழைப்பினையும் விடுத்துள்ளனர். 

குறித்த ஐந்து கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள திண்ணை தனியார் விடுதியில் நடைபெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சிகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். 

அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, 

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி;யின்(புளொட்) தலைவர் சித்தார்த்தன் தெரவிக்கையில்,  தமிழ் மக்களின் விடுதலை நோக்கிய பயணத்தில் ஐந்து கட்சிகள் ஒன்றாகச் செயற்படுவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளோம். அந்த அடிப்படையில் தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் கூட்டாகச் செயற்படவுள்ளோம். தமிழ் மக்கள் சார்ந்து எம்முடன் இணைந்து செயற்படக் கூடிய ஏனைய கட்சிகளையும் எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு வருமாறு நாம் அழைப்பு விடுகின்றோம்.

அதேநேரம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பது எம்முடன் தொடர்புடையதொரு கூட்டமைப்பாகும். அது தனிநபருக்குச் சொந்தமானது அல்ல. அதற்கு 2008ஆம் ஆண்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அந்தக் கூட்டணியில் தான் நாம் தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அந்தக் கூட்டணியின் தேசிய செயற்குழுவில் புதிய கூட்டமைப்பின் ஐந்து கட்சிகளினதும் உறுப்பினர்கள் அங்கத்துவத்தினைக் கொண்டிருப்பார்கள். 

அதேநேரம், அனுபவம் வாய்ந்த விக்னேஸ்வரனுக்கு, அரசியல் கட்சியொன்று தனிநபரின் பெயரில் பதிவு செய்ய முடியாது என்பது நன்கறிந்த விடயமாகும். ஆகவே அக்கட்சியின் செயலாளர் பதவி தான் அவருக்கு பிரச்சினையென்றால் அதனை வழங்குவதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்றார். 

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், 

ஐந்து அரசியல் கட்சிகளுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை என்பது தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்காக தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் இணைந்து தொடர்ச்சியாக பணியாற்றுவதற்கானதாகும். 

இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்பதற்காக கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு இடையில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் தமிழ் அரசுக்கட்சியும் பங்கேற்று வந்திருந்தது. இருப்பினும் தமிழரசுக்கட்சியானது உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் ஆசனங்களைப் பெறுவதை நோக்காக் கொண்டு தனித்து போட்டியிடுவதாக கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிவிட்டது. 

இந்நிலையில், தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருக்கும் ரெலோ,புளொட் ஆகிய தரப்புக்களுடன் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியிந்த நாமும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சி, போராளிகள் கட்சி ஆகியனவும் ஒன்றிணைந்துள்ளோம். 

மேலும், தமிழ் மக்கள் மத்தியிலிருந்து சகல கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்துவருகின்றது. அவர்கள் கடந்த காலங்களில் அதற்கான பகிரங்க வெளிப்பாடுகளையும் செய்துள்ளார்கள். அதற்கமைவாகவே விடுதலை இயக்கங்களாக இருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய நாம் ஒன்றுபட்டிருக்கின்றோம். 

புதிய கூட்டணியானது. தனிக்கட்சி ஆதிக்கமற்றவகையில் ஜனநாயகத் தன்மை நிறைந்த கட்டமைப்பாகவே உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்காலத்தில் இக்கூட்டமைப்புக்கு யாப்பொன்று உருவாக்கப்பட்ட  கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த விடயங்களை ஏற்றுக்கொள்கின்ற மனமாற்றம் முதலில் தமிழரசுக்கட்சிக்கு அவசியமாகின்றது. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுகின்றபோது அக்கட்சியும் எம்முடன் இணைந்து பயணிக்க முடியும் என்றார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியான தமிழரசுக்கட்சியானது தேர்தல் நலனை அடிப்படையாக வைத்து கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது. அது எமக்கு மனவருத்தினை அளிக்கும் செயற்படாக உள்ளது.  

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கொள்கை ரீதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமான நிலையில் ஐக்கியத்துடன் பயணிக்க வேண்டும் என்பதே விருப்பமாக உள்ளது. அதுவொரு பதிவுசெய்யப்பட்ட தரப்பாக, ஜனநாயக கட்டமைப்பாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது. 

ஆனால், தமிழரசுக்கட்சி அந்த விடயங்களை கருத்தில்கொள்ளாது வெளியேறிவிட்டது. இதனால் கூட்டமைப்பில் எஞ்சியிருந்த நாம் ஏனைய கட்சிகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பினை உருவாக்கியுள்ளோம். 

மேலும், கூட்டமைப்பில் ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னம் பயன்படுத்தப்பட்ட நிலையில் அத்தரப்புவெளியேறியது. தற்போது தமிழரசுக்கட்சி சின்னத்துடன் வெளியேறிவிட்டது. ஆகவே எதிர்வரும் காலத்தில் தனியொரு கட்சியினை நம்பி அதன் சின்னத்தில் எம்மால் இணைந்து செயற்பட முடியாது. 

ஆகவே தான் நாம், பொதுவான கட்சியொன்றையும், சின்னத்தையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முகங்கொடுத்த நெருக்கடிகளின் பல அனுபங்களின் அடிப்படையில் தான் அந்தக் நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். 

ஆகவே, தான் விக்னேஸ்வரனின் சின்னத்திலும், அவருடைய கட்சியிலும் போட்டியிட முடியாத நிலைமை எமக்குள்ளது. இந்நிலையில், அவருடன் நாம் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுத்துக்கொண்டு இருக்கின்றோம். அவரும் எமது அணியுடன் எமது நிலைப்பாடுகளை புரிந்து இணைந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றோம். 

அதேநேரம், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனதிராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் எம்முடன் இணைந்து கொள்ள வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக கோரிக்கை விடுகின்றோம். மக்கள் எமக்கு பலமான ஆணை வழங்குகின்றபோதுஅவர்கள் அதனை உணர்ந்து கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காக இணைவார்கள் என்றார். 

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா தெரிவிக்கையில், இளம்தலைமுறையினர் தமிழ்த் தேசிய அரசியலை கையேற்பதற்கான அவசியமும், அவசரமும், ஜனநாயக அரசியலில் முன் எப்பொழுதுமில்லாத அளவிற்கு தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே, இளந்தலைமுறையினர், அரசியல் ஆர்வம் கொண்டவர்கள் நீங்கள், எதிர்காலம் உங்களுக்குரியது.

எனவே, பார்வையாளர்களாக இருக்காது, தமிழ் மக்களுடைய தேசிய விடுதலையை கையேற்பதற்கு இளந்தலைமுறையினர் முன்வரவேண்டுமென பகிரங்க வேண்டுகோளாக விடுகின்றேன். அத்துடன் தனியொரு தலைவரால் இனமொன்றின் விடயங்களை கையாள முடியாது. அவ்வாறான மாபெரும் தலைவர்கள் என்று யாருமில்லை. ஆகவே கூட்டுத்தலைமைத்துவமே தற்போது அவசியமாகின்றது என்றார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்) தெரிவிக்கையில், 

தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கின்றபோது அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் விடுதலை இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்திருந்தார். கூட்டமைப்பினை ஒரு அரசியல் தேசிய கட்டமைப்பாகவே உருவாக்கியிருந்தார். ஆனால் உள்ளுராட்சி மன்றத் தேர்லை அடிப்படையாக வைத்து தமிழரசுக்கட்சி வெளியேறியமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுத்தெருவில் விடப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பை அவ்வாறு பலவீனமாகச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. போராளிகளாக இருந்தவர்கள் என்ற அடிப்படையில் அதனைப் பலப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து பணியாற்றும் முகமாகவே இணைந்துள்ளோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »