ஷேன் செனவிரத்ன
கல்வி கற்கும் பிக்குகள் என தம்மை இனங்காட்டிக்கொண்டு, மதுபோதையில் சாதாரண உடையில் இருந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (30) அதிகாலை 1 மணியளவில் கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கண்டி - மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டையும் காணப்படாமையினால் கைது செய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த 6 பேரும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதில் ஐவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பவர்கள் என்பதுடன், ஒருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்பவர் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன் இவர்கள் தங்காலை, காலி, பிலிமத்தலாவை, நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரும் மது போதையில் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் தமது அடையாள அட்டைகளை பொலிஸாரிடம் காண்பிக்கும் வரை தடுத்து வைக்கவும் அடையாள அட்டையை காண்பித்த பின்னர் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.